டேங்கர் லாரிமீது சொகுசு பேருந்து மோதல்: 4 பயணிகள் உடல் நசுங்கி பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தச்சூர் கூட்டுச்சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் பனிமூட்டத்துக்கு இடையே ஒரு கெமிக்கல் டேங்கர் லாரி வெளிமாநிலத்துக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை டிரைவர் சுப்பாராவ் ஓட்டி சென்றார். அவருடன் கிளீனரும் இருந்துள்ளார். அந்த சாலை குண்டும் குழியுமாக இருந்ததால், பள்ளத்தில் டேங்கர் லாரி ஏறி இறங்கியதில், அதன் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் ஒருபக்கமாக டேங்கர் லாரி சாய்ந்தது.

அப்போது டேங்கர் லாரியின் பின்னால் ஐதராபாத் நோக்கி பயணிகளுடன் சென்ற ஒரு தனியார் சொகுசு பேருந்து, பள்ளத்தில் சாய்ந்த டேங்கர் லாரிமீது பக்கவாட்டில் வேகமாக மோதியது. இவ்விபத்தில் அந்த சொகுசு பேருந்தின் முன்பக்க பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் அப்பேருந்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினர். இவ்விபத்தில் பேருந்தில் இருந்த பெங்களூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (45),

ஆந்திரா மாநிலம், நெல்லூரை சேர்ந்த ஸ்ரீதர் (33), ரோகித் சர்மா (44), தண்டலச்சேரி பகுதியை சேர்ந்த சென்னை மாநகராட்சி ஓட்டுநர் ஜானகிராமன் (45) ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் கவரப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். பின்னர் சுமார் 3 மணி நேரம் போராடி, பேருந்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டனர்.

அவர்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், விபத்தில் இறந்த 4 பேரின் சடலங்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இப்புகாரின் பேரில் கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, டேங்கர் லாரி டிரைவர் சுப்பாராவ், பேருந்து டிரைவர், கிளீனர் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.