கிராம சாலை தரமின்றி அமைக்கப்பட்டதை கண்டித்து, சமூக ஆர்வலர் தன் பைக்கை நடு ரோட்டில் நிறுத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில், கரிக்கலாம்பாக்கம் – ஏம்பலம் சந்திப்பு வரை, 4.5 கி.மீ., துாரத்திற்கு, மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா’ திட்டத்தில், 4.47 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன் துவங்கியது.
டெண்டரில் குறிப்பிட்டுள்ளதை போல சாலை அமைக்காமல், தரமின்றி அமைக்கப்படுவதாக, கரிக்கலாம்பாக்கம் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
இதனால், சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. சாலைப்பணி குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் பெற்று, தரமின்றி சாலை அமைக்க உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினர்.
இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட சாலை பணியை, நேற்று முன்தினம் இரவோடு இரவாக அமைத்தனர். இதை கண்டித்து, சமூக ஆர்வலர் கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த ஜானகிராமன் மகன் தணிகாசலம், 35; நேற்று காலை, 9:30 மணிக்கு, தன் ‘ஹோண்டா ஷைன்’ பைக்கை கரிக்கலாம்பாக்கம் நான்கு ரோடு சந்திப்பில் நிறுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
கரிக்கலாம்பாக்கம் எஸ்.ஐ., தமிழ்வாணன் மற்றும் போலீசார், தணிகாசலத்தை கைது செய்தனர். அவர் மீது, பொது இடத்தில் தீ வைத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement