2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் ரொக்கமும், 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையை பொங்கல் பரிசுத் தொகுப்பாக தமிழக அறிவித்திருக்கிறது. ஜனவரி 2-ம் தேதி முதல் இது தமிழகம் முழுவதும் இது வழங்கப்படவிருக்கிறது. இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால், விவசாயிகளை தி.மு.க அரசு வஞ்சிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், `பொங்கல் தொகுப்பினை நம்பி விளைவிக்கப்பட்ட செங்கரும்பினை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சீமான், “அரசு கொள்முதலை நம்பி கரும்பினை விளைவித்த விவசாயிகளை வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தி.மு.க அரசு தள்ளியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. மக்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்தாமல் ஒவ்வோர் ஆண்டும் இலவச வேட்டி, சேலை முதல் பொங்கல் வைப்பதற்கு தேவைப்படும் பொருள்கள் வரை இலவசமாக கொடுத்தால்தான் கொண்டாட முடியும் என்ற வறுமை நிலையில் தமிழ் மக்களை வைத்திருப்பதுதான் அறுபது ஆண்டுக்காலமாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகள் ஏற்படுத்திய வளர்ச்சி, செய்த சாதனை, ஏற்படுத்திய வாழ்வியல் முன்னேற்றமாகும்.

எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பொங்கல் தொகுப்புடன் 2,000 ரூபாய் கொடுப்பதாக அறிவித்தபோது, அதனை 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். தற்போது தி.மு.க ஆட்சிக்காலத்தில் வழங்கப்படவிருக்கும் 1,000 ரூபாயை 5,000-மாக உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துகிறார். இந்த கொடுமைகளையெல்லாம் வேடிக்கை பார்ப்பதே தமிழக மக்களின் வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் ஒழுகும் வெல்லம், காய்ந்த கரும்பு, புளியில் பல்லி, பூச்சியரித்த முந்திரி என தரமற்ற பொருள்களை கொடுத்து தி.மு.க அரசு செய்த முறைகேடுகளால் பொதுமக்களிடத்தில் கடும் விமர்சனத்துக்கு ஆளானது.

தவற்றை திருத்திக்கொண்டு தரமான பொருள்களை மக்களுக்கு வழங்க நிர்வாகத் திறனற்ற தி.மு.க-வின் திராவிட மாடல் அரசு, இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு பொருள்களுக்கு பதிலாக குடும்பத்துக்கு, 1,000 ரூபாய் என மக்களின் வரிப்பணத்தையே மீண்டும் அவர்களுக்கு கொடுப்பதாக அறிவித்திருக்கிறது. இதனால் கடந்த பல ஆண்டுகளாக பொங்கல் தொகுப்புக்காக மேற்கொள்ளப்பட்ட அரசு கரும்பு கொள்முதலை நம்பி, லட்சக்கணக்கான ஏக்கரில் கரும்பினை விளைவித்த விவசாய பெருமக்கள் மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அடைந்திருக்கின்றனர். கரும்பு விற்பனை இடைத்தரகர்கள் அடிமாட்டு விலைக்கு கரும்பினை வாங்க முன்வருவதால் வெட்டும் கூலிகூட கிடைக்காது நட்டமடையும் நிலைக்கும் விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இதனால் பல இடங்களில் வீதியில் இறங்கி அரசு கொள்முதலை வலியுறுத்தி விவசாயிகள் போராடியும் வருகின்றனர். பொங்கல் தொகுப்பு பொருள்கள் வழங்கப்படாது என்பதை தி.மு.க அரசு முன்கூட்டியே அறிவித்திருந்தால் அதற்கேற்ப விவசாயிகள் சாகுபடி பரப்பளவை குறைத்து கரும்பினை பயிரிட்டுப்பார்கள். ஆனால் அரசு அதனை செய்யத் தவறியதால் தற்போது விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நட்டத்துக்கு முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசே பொறுப்பேற்க வேண்டும். ஆகவே, கரும்பு விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று விளைவிக்கப்பட்ட செங்கரும்பினை தமிழ்நாடு அரசே உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.