சேலம் தலித் விவகாரம்; திருமா ஆப்சென்ட்… அண்ணாமலை பிரசென்ட்..!

சேலத்தில் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்ட தலித் இளைஞரை அதே ஊரைச் சேர்ந்த திமுக நிர்வாகி பஞ்சாயத்துக்கு அழைத்து வந்து இளைஞரின் பெற்றோர் முன்பு கேவலமாக பேசி அவமான படுத்திய சம்பவம் சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின்படி எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு பிரிவுகளின் கீழ் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால், திமுக கட்சி அந்த நபரை தற்காலிகமாக நீக்கியிருப்பது சமூக நீதி பேசும் கட்சியை கேலி செய்யப்படும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

சேலம் சூரமங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருமலைக்கிரியில் தலித் இளைஞன் பிரவீன்குமார் என்பவர் கடந்த 26 ஆம் தேதி இரவு அங்குள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் கருவறை முன்பு நின்று சாமி கும்பிட வேண்டுமென்று கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த இடைநிலை சமூகத்தை சேர்ந்தவர் பிரவீன் குமாரை தடுத்தி நிறுத்தியுள்ளனர். அதற்கு எதிர்வினையாற்றிய இளைஞர், கோயில் என்பது 18 பட்டிக்கும் சொந்தமானது தானே? நான் ஏன் உள்ளே போகக்கூடாது என்று கேட்டுள்ளார். இந்த விஷயத்தை அந்த இடைநிலை சமூகத்தை சேர்ந்தவர்கள் திமுக ஒன்றிய செயலாளரும், திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவருமான மாணிக்கம் என்பவரிடம் கூறியுள்ளனர்.

அவர் உடனே பஞ்சாயத்து கூட்டி தலித் இளைஞரை பெற்றோருடன் வரச்சொல்லி பெற்றோர் கண்முன்னே கேட்கக்கூடாது கேள்விகளை கேட்டு அவமானப்படுத்தியுள்ளார். ஆதிக்க சாதியினரின் கண்முன்னே ஒடுக்கப்பட்ட இளைஞரை மேலும் புண்படுத்தி வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட மாணிக்கத்தை திமுக கட்சி தற்காலிகமாக நீக்கியுள்ளது. ஆனால், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே சமயம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் இதுகுறித்து ஒரு கண்டன அறிக்கையை கூட இதுவரை விடவில்லை.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விஷயத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள ட்வீட்டில் கூறியுள்ளதாவது; ”ஒரு திமுக எம்பி நேற்று கோயில் இடிப்பு சம்பவத்தில் பெருமைப்பட்டுக் கொண்டார், இன்று சேலம் மாவட்டத்தில் திமுக மாவட்டச் செயலர் ஒருவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பதைக் காண்கிறோம். சமூக நீதிக்கு திமுகதான் நமக்கெல்லாம் ஒரு மாடல்” என்று விமர்சித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பருகும் குடிநீர் தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட செயல் மாநிலத்தை உலுக்கியது. இந்த சம்பவம் நடந்ததில் இருந்து தற்போது வரை அந்த பகுதிக்கு அமைச்சர்களோ அல்லது முதல்வரோ செல்லவில்லை. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூட பெரிய அளவில் தனது கண்டனத்தை தெரிவிக்காமல் அவரது அணுகுமுறை கூட லேசாக இருந்ததாக அரசியல் பேசுபவர்கள் விமர்சிக்கின்றனர்.

இந்த நிலையில், நவீன தீண்டாமையின் உச்சமாக அதுவும் திமுக நிர்வாகியே தலித் இளைஞர் மீது சாதி வன்மத்தை கக்கியதற்கு, கட்சியை விட்டு நிரந்தரமாக அவரை நீக்காமல், வழக்கம்போலவே தற்காலிகமாக நீக்கி விட்டு நாளைக்கு எந்த முகத்தை வைத்து சமூக நீதியை குறித்து பேசுவார்கள் என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும், ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருப்பதால் தலித் மக்கள் விஷயத்தில் நிதானம் கையாளுகிறாரா என்ற கேள்வியும் எழுப்புகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.