கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெற்ற வருடாந்திர சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியில் கன்னியாகுமரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கலந்து கொண்டார்.
அப்பொழுது செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது “அதிமுகவின் இரட்டை இலை சின்னம் இந்த இடைத்தேர்தலில் மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களிலும் எடப்பாடியார் கையில் தான் இருக்கும்.

சென்னையில் இருந்து கொண்டு ஒருவர் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்போம், ஆனால் வேட்பாளரை எதிர்ப்போம் என பேசி வருகிறார். இந்த விசித்திரமான அறிவிப்பை பார்த்து அடக்க முடியாத சிரிப்பு தான் வருகிறது.
திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற பல பிரச்சனைகள் உள்ளதால் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிற்காமல் திமுக நின்றிருந்தால் தேர்தல் காலம் இன்னும் சூடு பிடித்திருக்கும். தமிழ்நாட்டில் உள்ள தாய்மார்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக அஜித் குமார் மற்றும் விஜய் ரசிகர்கள் வாக்கு சேகரித்தனர். அதை நானே என் கண்ணால் பார்த்தேன்” என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். நடிகர் விஜய் ஏற்கனவே தனது பெயரில் மக்கள் இயக்கத்தை நடத்தி வரும் நிலையில் வாரிசு திரைப்படத்தின் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த தேர்தலில் விஜய் ரசிகர்கள் யாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் இத்தகைய தகவலை வெளியிட்டுள்ளார்.