மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலியான சம்பவத்தில் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் போராட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே வடகடும்பாடி கிராமத்தில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கோதண்டன் (40) மற்றும் அவரது மகன் ஹேமநாதன் (10) ஆகியோர் குடிதண்ணீர் கேன் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில்  சென்றனர். அப்போது, தொங்கி கொண்டிருந்த மின்கம்பி இவர்கள் மீது அறுந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில், இருவரது உடலும் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய இருக்கிறநிலையில் சடலத்தை வாங்க மறுத்த கோதண்டன் உறவினர்கள் 300க்கும் மேற்பட்டோர் திடீரென செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து மின் வாரியத்தை கண்டித்து கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஓராண்டு காலமாக இந்த மின்கம்பி அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது.  அதை சீர்செய்து தருமாறு அப்பகுதி மக்கள் தொடர்ந்து மின் வாரியத்தில் புகார் அளித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து மின் வாரியத்தில் இருந்து நேற்று முன்தினம் இச்சம்பவம் நடக்கும்வரை ஒருவர்கூட வந்து பார்க்கவும் இல்லை. மேலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை என கூறப்படுகிறது. புகார் அளித்தபோதே தொங்கி கொண்டிருந்த மின் கம்பியை அகற்றி சீர் செய்யப்பட்டிருந்தால் 2 உயிர்கள் பறிபோயிருக்காது. மின் வாரியத்துறையின்அலட்சிய போக்கினால் நடந்த பேரிழப்பை ஈடுகட்டும் விதமாக உடனடியாக இந்த சம்பவம் குறித்து தவறு செய்த அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அவர்கள் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வீதம் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்தார்.  மேலும்,   குடும்பத்தில்  ஒருவருக்கு அரசாங்க வேலை வழங்கிடவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, உறவினர்கள் போராட்டத்தை  கைவிட்டு சடலத்தை பெற்று கொள்வதாக சம்மதம் தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

* மின்சார வாரியம் சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு
மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன் (41), வெல்டர். கடந்த, 10 ஆண்டுகளாக பெருமாளேரி பகுதியில் வீடு கட்டி குடும்பத்தோடு வசித்துவந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கோதண்டராமன் தனது பெரிய மகன் ஹேமநாதன் (12), பைக்கில் குடிநீர் கேன் வாங்க வடகடம்பாடி சென்றபோது, மின்சாரம் தாக்கி இருவரும் இறந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவின்பேரில், செங்கல்பட்டு மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமுர்த்தி நேற்று மாலை மின்சாரம் தாக்கி தந்தை – மகன் பலியான வீட்டிற்கு சென்று மின்சார வாரியம் மூலம் இழப்பீட்டு நிதி தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை கோதண்டராமன் மனைவி லட்சுமியிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.

திருப்போரூர் உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், ஆலத்தூர் உதவி பொறியாளர் பாபு, நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணிசீமான், வடகடம்பாடி ஊராட்சி தலைவர் பரசுராமன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். மேலும், மின்சாரம் தாக்கி பலியான கோதண்டராமன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என நெம்மேலி திமுக ஊராட்சி தலைவர் ரமணிசீமான் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.