புதுச்சேரியில் பட்டியலின மக்களுக்கான சிறப்பு நிதி ரூ.925 கோடி திருப்பி அனுப்பப்பட்டதாக விசிக குற்றச்சாட்டு

புதுச்சேரி: பட்டியலின மக்களுக்கான சிறப்பு கூறு நிதி 5 ஆண்டுகளில் ரூ.925 கோடி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்றும், இந்த ஆண்டில் ரூ.166 கோடியை செலவிடாததற்கு பொறுப்பேற்று துறையின் அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி விலக வேண்டும் எனவும் புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூறியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தால் 2022 – 2023-ம் நிதியாண்டில் புதுச்சேரி அரசுக்கு சுமார் ரூ.413 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் புதுச்சேரி மாநிலத்துக்கு பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் சிறப்பு கூறு நிதி மூலம் ஆண்டுக்கு ரூ.400 கோடிக்கு மேல் கிடைத்து வருகிறது. இதனைப் பயன்படுத்தி மாநில அரசின் திட்டங்கள் மூலம் அம்மக்களின் சமூக,பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பு கூறு நிதியை செலவிட வேண்டியது புதுச்சேரி மாநில அரசின் பொறுப்பாகும்.

இந்த நிலையில் சிறப்பு கூறு நிதியிலிருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.413 கோடியில் சுமார் ரூ.166 கோடியை புதுச்சேரி அரசு செலவிடாமல் முடக்கி வைத்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பட்டியலின மக்களுக்கான சிறப்பு கூறு நிதி முறையாக செலவிடப்படுவதில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சிறப்பு கூறு நிதி ரூ.925 கோடி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்துக்கு போதிய நிதி வழங்குவதில்லை என்று அவ்வப்போது கூறும் முதல்வர் ரங்கசாமி பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு கூறு நிதியை ஏன் செலவிடவில்லை என்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்நிலை குறித்து உரிய கள ஆய்வினை மேற்கொண்டு நலத் திட்டங்களையும், பொருளாதார மேம்பாட்டு திட்டங்களையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டிய முதல்வர் ரங்கசாமி, துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, பாஜகவினருடன் கூட்டு சேர்ந்து பொறுப்பற்று உள்ளனர்.

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறப்பு கூறு நிதி எத்தனை கோடி ரூபாய் செலவிடப்பட்டது என்றும், எந்தெந்த துறைகள் மூலம் செலவிடப்பட்டது என்றும், அதன் பயனாளிகள் யார் என்பது குறித்து புதுச்சேரி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இந்த நிதி ஆண்டில் பட்டியலின மக்களுக்கான சிறப்பு கூறு நிதி சுமார் ரூ.166 கோடியை வீணடித்த துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பொறுப்பற்ற செயல் காரணமாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்” என்று தேவ.பொழிலன் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.