ராகுல் காந்தி: எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம்… அரசியல் தலைவர்கள் கூறுவதென்ன?!

2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தி, `ஏன் அனைத்துத் திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டிருக்கின்றனர்’ என்று பேசியிருந்தார். இது குறிப்பிட்ட சமூகத்தினரைத் தாக்குவதாக குஜராத்தைச் சேர்ந்தவர் ஒருவர், ராகுல் காந்திக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், அதிகாரபூர்வமாக எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியாகியிருக்கிறது.

மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி

இந்த செய்தி தற்போது இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தமது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, “எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய பா.ஜ.க அனைத்து வழிகளிலும் முயன்றது. உண்மையைப் பேசுபவர்களை வைத்துக்கொள்ள அவர்களுக்கு விரும்பமில்லை. ஆனால், நாங்கள் தொடர்ந்து உண்மையைப் பேசுவோம். நாடாளுமன்ற கூட்டுக் குழு(அதானி விவகாரத்தில்) கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம். தேவைப்பட்டால் ஜனநாயகத்தை காப்பாற்ற சிறைக்கும் செல்வோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி – யுமான ஜெய்ராம் ரமேஷ், “ராகுல் காந்தி பதவி நீக்கம் குறித்த போராட்டத்தை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடத்துவோம். நாங்கள் மிரட்டப்பட்டால் அமைதியாக இருக்க மாட்டோம். பிரதமருக்கு நெருக்கமான அதானியின் மெகா ஊழல் வழக்கில் குரல் கொடுத்ததற்காக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” எனப் பதிவிட்டிருக்கிறார்,

திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர், “நீதிமன்றத் தீர்ப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள், மேல்முறையீடு செயல்பாட்டில் இருப்பதாக அறியப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கச் செயலும், அது நிறைவேற்றப்பட மேற்கொள்ளப்பட்ட வேகமும் என்னை திகைப்படைய வைத்திருக்கிறது. இது நமது ஜனநாயகத்திற்கு மோசமானது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, “பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பா.ஜ.க-வின் பிரதான இலக்காக மாறியுள்ளனர்! கிரிமினல் பின்னணி கொண்ட பா.ஜ.க தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டாலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களின் பேச்சுக்காக குறிவைக்கப்படுகிறார்கள். இன்று, நமது அரசியலமைப்பின், ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியைக் கண்டுள்ளோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “ராகுல் காந்தியை தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதற்காக செய்யப்பட்ட சதிச் செயல். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். 2 ஆண்டு சிறை சென்றால் தகுதி நீக்கம் செய்யலாம் என்பதால் பழிவாங்கும் நடவடிக்கை.” என்றிருக்கிறார்.

திருமா

நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி வேணுகோபால், “அதானி குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பிய நாளிலிருந்து, அவரது குரலை அடக்க சதி தொடங்கப்பட்டது. பா.ஜ.க அவரை பேச அனுமதிக்கவில்லை. இது பா.ஜ.க அரசின் ஜனநாயக விரோத மற்றும் சர்வாதிகார அணுகுமுறையின் தெளிவான வழக்கு” எனப் பேட்டியளித்திருக்கிறார்.

தமிழ்நாடு பா.ஜ.க. துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, “ராகுல் காந்தியை தண்டித்ததன் மூலம் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. ராகுல் காந்தியை பாராளுமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம் செய்தது ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற உண்மையை உணர்த்தியுள்ளது. காங்கிரஸ் இன்று ஆட்சியில் இருந்திருந்தால், 1975ம் ஆண்டு இதே போன்று இந்திரா காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவசர நிலையை கொண்டு வந்தது போல் கொண்டு வந்திருக்கும். பாஜக ஆட்சியில் இருப்பதால் நாடும், நாட்டு மக்களும் நெருக்கடி நிலை பயங்கரத்தில் அவதியுறவில்லை” எனப் பதிவிட்டிருக்கிறார்.

உதயநிதி, கனிமொழி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தேர்தல் பேச்சு தொடர்பாக பா.ஜ.க-வினர் தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸின் ராகுல் காந்தி அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறையென தீர்ப்பு வந்ததும், அவரை MP பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ள ஒன்றிய பா.ஜ.க அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளது” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ” சட்டத்தின் அடிப்படையிலேயே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சாதாரண மனிதனுக்கு என்ன பொருந்துமோ அதே தான் ராகுல் காந்திக்கும் பொருந்தும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

எம்.பி. கனிமொழி, “ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலைக்கு இணையானது” எனக் காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

ஆ.ராசா

எம்.பி. ஆ. ராசா, “சாதாரண குற்றவியல் நடைமுறை சட்டத்தைக் கொண்டு வந்து ராகுல் காந்தியை பா.ஜ.க பழிவாங்கியிருக்கிறது. சர்வாதிகார ஆட்சியை ஒற்றை மனிதர் நடத்திக் கொண்டிருக்கிறார். எப்போதும் இல்லாத அளவு எதிர்கட்சிகள் ஆளும் அரசை எதிர்த்து நிற்கிறது” எனப் பேட்டியளித்திருக்கிறார்.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, “ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. திருடனை திருடன் என்று அழைப்பது நம் நாட்டில் குற்றமாகிவிட்டது. திருடர்களும் கொள்ளையர்களும் இன்னும் சுதந்திரமாக இருக்கிறார்கள், ராகுல் காந்தி தண்டிக்கப்பட்டிருக்கிறார். இது ஜனநாயகத்தின் நேரடி கொலை. அனைத்து அரசு அமைப்புகளும் அழுத்தத்தில் உள்ளன. இது சர்வாதிகாரத்தின் ஆரம்பம். போராட்டத்திற்கு மட்டுமே இது வழிகாட்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, “இன்றைய தினம் நரேந்திர மோடி ஜனநாயகத்தை படுகொலை செய்த துயரமான தினம். நீதிமன்றம் அழுத்தத்திற்கு உள்ளாகிறது என்ற ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு உண்மையாகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, “ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் வன்மையான கண்டனத்துக்குறியது. ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் என்பது இந்தியாவின் அரசியலமைப்புச் சுதந்திரத்திற்கான சவப்பெட்டியின் கடைசி ஆணி” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஜோதிமணி

காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ” உங்களுக்காகவும், இந்த நாட்டிற்காகவும் அவர் தொடர்ந்து போராடி வருகிறார், ஜனநாயகத்தை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் செய்கிறார். சதி செய்தாலும், அவர் இந்த சண்டையை எந்த விலையிலும் தொடருவார், இந்த விஷயத்தில் நியாயமான நடவடிக்கை எடுப்பார். போராட்டம் தொடரும்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.