கிரீஸ் நாட்டில் மே 21-ல் பொதுத் தேர்தல்: பிரதமர் மிட்சோடாகிஸ் அறிவிப்பு

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் வரும் மே 11-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான கிரீஸில் வலதுசாரி கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் ஆட்சி உள்ளது. அக்கட்சியின் தலைவரான கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் உள்ளார். முன்னாள் பிரதமர் கான்ஸ்டான்டைன் மிட்சோடாகிஸின் மகன் இவர். கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் பிரதமராக பதவியேற்றது முதல் இவரது ஆட்சி மீது மக்களுக்கு நன்மதிப்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தொலைபேசி உரையாடல்கள் அரசு பாதுகாப்பு சேவை அமைப்பால் ஒட்டு கேட்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை மற்றும் கடந்த மாதம் நிகழ்ந்த மிகப் பெரிய ரயில் விபத்து ஆகியவற்றால் அரசு விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. குறிப்பாக, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வடக்கு கிரீஸில் நிகழ்ந்த மிகப் பெரிய ரயில் விபத்தால் 57 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் அரசின் மீது கோபத்தை ஏற்படுத்தியது. ரயில்வே நெட்ஒர்க் சேவையை அரசு சரிவர கவனிக்காததே இதற்குக் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அரசின் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், அரசுக்கு செல்வாக்கு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

நாட்டின் பிரதான இடதுசாரி எதிர்க்கட்சியான சைரிசாவைவிட அரை முதல் 4 புள்ளிகள் வரை மட்டுமே ஆளும் புதிய ஜனநாயக் கட்சிக்கு கூடுதலாகக் கிடைத்துள்ளது. தனது ஆட்சிக்கு செல்வாக்கு குறைந்திருப்பதை அடுத்து, வரும் மே 21-ம் தேதி பொதுத் தேர்தலுக்கு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய கிரியாகோஸ் மிட்சோடாகிஸ், ”நாட்டிற்கு தெளிவான தீர்ப்பு தேவை. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் துணிச்சலாகவும், குறைவான சமரசங்களுடனுமே ஆட்சி செய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். எனினும், தேர்தல் நடைபெற்றாலும் ஆட்சி மாற்றம் ஏற்படாது என செய்திகள் கூறுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.