சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) வெளிநாட்டுக்கு சென்றபோது நடிகர் ரஜினிகாந்த் மாற்றிக்கொள்வதற்கு துணி இல்லாமல் தவித்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
ரஜினிகாந்த். வைரமுத்து எழுதியதுபோல் இந்த பெயருக்குள்ளே காந்தம் இருப்பது உண்மைதான். சிறியவர் முதல் பெரியவர்வரை அனைவரையும் ஈர்த்த ரஜினிகாந்த் இன்றும் சூப்பர் ஸ்டார் நாற்காலியை அலங்கரித்துக்கொண்டிருக்கிறார். இளைய ஹீரோக்களுக்கு ஈடு கொடுத்து நடித்துவருகிறார்.
அனைவரிடமும் தாக்கம்: ஒருகாலத்தில் நடிக்க வந்தவர்களுக்கு எப்படி சிவாஜியின் தாக்கம் இருந்ததோ அதேபோல் கடந்த 40 வருடங்களாக நடிக்க வருபவர்களுக்கு ரஜினிகாந்த்தின் தாக்கம் இருக்கும். இனி நடிக்க வருபவர்களுக்கும் இருக்கும். அந்த அளவு தனது தனித்த ஸ்டைலால் கவர்ந்து வைத்திருக்கிறார். அவர் தலை கோதும் முறை, நடை, உடை, அவரது உடல் மொழி என அனைத்திலும் ஸ்டைல் ததும்ப ததும்ப நிறைந்திருக்கும்.
பாலசந்தர் அறிமுகப்படுத்திய ரஜினிகாந்த்: பேருந்து நடத்துனராக இருந்தவர் சினிமா மீது ஆர்வத்தில் சினிமா கல்லூரியில் படித்து பாலசந்தர் கண்ணில் பட்டு திரையுலகுக்கு அறிமுகமானார். அபூர்வ ராகங்கள் முதல் படமாக அமைந்தது. அதன் பிறகு பல படங்களில் வில்லனாகவும், கமல் ஹாசனுடனும் நடித்துவந்தார். இருப்பினும் தனது ஸ்டைலால் தனித்தே தெரிந்தார். ஒருகட்டத்தில் கமல், ரஜினி என இருவருமே முடிவெடுத்து தனித்தனியாக நடித்தனர்.
அசுர வளர்ச்சி ரஜினி: ரஜினிகாந்த் தனியாக நடிக்க ஆரம்பித்ததும் அவருக்கென்ற மார்க்கெட் சரசரவென உயர்ந்தது. கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்ட ரஜினி அவற்றில் என்னென்ன வித்தியாசம் காண்பிக்க முடியுமோ அத்தனையையும் காண்பித்தார். இதன் காரணமாக ரஜினி இந்தியாவின் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்தார். மேலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறினார்.
மனதில் பட்டதை பேசுபவர்: ரஜினிகாந்த் இப்போது கொஞ்சம் பக்குவம் அடைந்திருக்கலாம். ஆனால் நடிக்க வந்து வளர்ந்த பிறகு தனது மனதில் பட்டதை யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் பேசியவர். இதனால்தான் அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஒரு சமயம் முட்டிக்கொண்டது. அதனையடுத்து திமுக கூட்டணிக்கு அவர் ஆதரவு குரல் கொடுத்தது அனைவரும் அறிந்தது.
அதேபோல், அஜித் மேடையில் சினிமாக்காரங்களை மிரட்டுகிறார்கள் என அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் முறையிட்டபோது அரங்கில் இருந்தவர்கள் கப் சிப் என்று இருக்க ரஜினி ஒரு ஆள் மட்டும்தான் எழுந்து நின்று கைத்தட்டினார்.

உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் எளிமை: ரஜினிகாந்த் பல வருடங்களாக உச்ச நட்சத்திரமாக இருந்துவருகிறார். ஆனால் அதற்காக எந்த பந்தாவையும் அவர் வெளியில் காட்டிக்கொள்ளாதவர். ஏதேனும் ஒரு படம் நன்றாக இருப்பதாக தனது மனதுக்கு பட்டால் அந்த படத்தில் பணியாற்றியவர்களை நேரில் அழைத்து பாராட்டுவார். அதேபோல், சக நடிகர்களிடமும் எந்த ஈகோவும் இல்லாமல் பழகுவார்.
உடையில்லாமல் தவித்த ரஜினி: இந்நிலையில் வெளிநாட்டுக்கு சென்றபோது மாற்றுவதற்குக்கூட துணி இல்லாமல் ரஜினி தவித்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது, நடிகர் சங்கத்தின் கடனை தீர்ப்பதற்காக நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் வெளிநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டார். விஜயகாந்த்தின் தீவிர முயற்சியால் ரஜினிகாந்த்தும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இப்படிப்பட்ட சூழலில் மலேசியா, சிங்கப்பூருக்கு விமானத்தில் அனைவரும் சென்றிருக்கிறார்கள். ஆனால் அங்கு சென்று இறங்கியதும் ரஜினி துணி வைத்திருந்த லக்கேஜ் மிஸ் ஆகிவிட்டதாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்திருக்கிறார். மேலும் அப்போது ரெடிமேட் உடை எடுப்பதற்கும் நேரம் இல்லாததால், அன்று நடந்த கலை நிகழ்ச்சியில் விஜயகாந்த்தின் சட்டையை போட்டுக்கொண்டாராம் ரஜினி. அந்த சட்டை அவருக்கு பெரியதாக இருந்தாலும் அதைப்பற்றி கவலைக்கொள்ளாமல் அணிந்துகொண்டாராம்.
இதனை பத்திரிகையாளர் அந்தணன் அளித்த பேட்டியில் பகிர்ந்திருந்தார். ரஜினி எது செய்தாலும் ஸ்டைல் என்ற மைண்ட் செட் ரசிகர்களுக்கும் வந்துவிட்டதால் அந்த பெரிய சட்டையயையும் ரஜினி ஸ்டைலுக்காகத்தான் அணிந்திருக்கிறார் என்று ரசிகர்களும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை போல.