ஐபிஎல் பைனல்.. ஓவர்கள் குறைப்பு.. சாதிக்குமா தோனி படை?.. சிஎஸ்கேவிற்கு இருக்கும் சவால்கள்!

அகமதாபாத்: மழையால் தடைப்பட்ட ஐபிஎல் இறுதிப்போட்டி நள்ளிரவு 12.10 மணியளவில் தொடங்கியது. சென்னை அணி வெற்றி பெற இலக்கு 15 ஓவர்களில் 171 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பவர் பிளே உள்ளிட்ட விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

ஏற்கனவே பிளே ஆப் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த போட்டியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற முதலில் பந்துவீச்சை தோனி தேர்வு செய்தார். ஏனெனில் வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட குஜராத் அணி எவ்வளவு பெரிய இலக்கு என்றாலும் சேஸ் செய்ய வாய்ப்பு உள்ளதால் முதலில் பேட்டிங் ஆட வைத்து கட்டுப்படுத்தி விடலாம் என்பது தோனியின் கணக்காக இருந்தது.

சுப்மான் கில் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாய் சுதர்சன் பின்னி பெடலெடுத்தார். அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 96 ரன்கள் குவித்தார். இதனால், குஜராத் அணியின் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 200 ரன்களுக்குள் அந்த அணியின் ரன் வேகம் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் குஜராத் அணி 214 ரன்கள் எடுத்தது.

215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இமாலய இலக்கை சென்னை அணிக்கு நிர்ணையித்தது. இதையடுத்து பேட்டிங்கை துவக்கிய சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டும் கான்வேயும் இறங்கினர். முகம்மது ஷமி முதல் ஓவரை வீசினார். ஆனால்,வெறும் 3 பந்துகள் வீசப்பட்ட நிலையில் போட்டி மழையால் தடை பட்டது.

சிறிது நேரத்தில் மழை விட்டதால் மைதானத்தை ஆய்வு செய்த கள நடுவர்கள் போட்டியை தொடங்க முடிவு செய்தனர். இதன்படி 10.45 மணியளவில் மைதானத்தை ஆய்வு செய்தனர். ஆனால் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் மீண்டும் 11.30 மணிக்கு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. 11.30 மணிக்கு ஆய்வு செய்த நடுவர்கள் போட்டி நள்ளிரவு 12.10 மணிக்கு தொடங்கும் என்று அறிவித்தனர்.

அதேபோல், 15 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. வெற்றி இலக்கும் 171 ஆக குறைந்துள்ளது. அதுபோக பவர் பிளே 4 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஒரு பந்து வீச்சாளர் அதிபட்சமாக 3 ஓவர்கள் மட்டுமே என்றும் விதி மற்றியமைக்கப்பட்டது. வழக்கமாக பவர் பிளே 6 ஓவர்களாகவும் ஒரு பவுலர் 4 ஓவர்களையும் வீச முடியும். ஆனால் ஓவர்கள் குறைக்கப்பட்டதால் இந்த போட்டியில் விதி மாற்றப்பட்டுள்ளது.

15 ஓவர்களில் 171 ரன்கள் என்பது ஒரு ஓவருக்கு சராசரியாக 12 ரன்கள் மேல் அடிக்க வேண்டியிருக்கும். குஜராத் அணியில் முகம்மது சமி, ரஷித் கான் போன்ற பந்துவீச்சை எதிர்கொண்டு அடிப்பது என்பது அவ்வளவு லேசானது இல்லை. ஆனாலும் சென்னையிலும் வலுவான பேட்டிங் லைன் அப் உள்ளது. எனவே நள்ளிரவை தாண்டியும் நடக்கும் இந்த போட்டி விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இன்றி பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.