மாஸ்கோ: ரஷ்யாவில் பொதுமக்களை உளவு பார்க்கும் முறையை செட்அப் செய்து கொடுத்த டாப் பணக்காரர்களில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த மிக மோசமான சம்பவம் நடந்துள்ளது.
ரஷ்யா ஒரு பக்கம் உக்ரைன் மீது போரைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்தாண்டு பிப். மாதம் தொடங்கிப் போர் 1.5 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. உக்ரைனை வெல்ல முடியாமல் போனதே புதினுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோக ரஷ்யாவில் நடக்கும் சம்பவங்களும் அவருக்கு நெருக்கடியாக மாறி வருகிறது. குறிப்பாக வாக்னர் குழு அவருக்கு எதிராகத் திரும்பியதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அதை முறியடித்துவிட்டாலும் கூட இது புதினின் இமேஜை பாதித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றனர்.
ரஷ்யா: இதற்கிடையே ரஷ்யாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களில் ஒருவர் மர்மமான முறையில் இப்போது உயிரிழந்துள்ளார். ரஷ்யாவில் வசிக்கும் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருட மென்பொருளை உருவாக்கியவர் தான் இவர். இதற்காக அமெரிக்கா இவரைத் தனது நாட்டிற்குள் நுழையத் தடை எல்லாம் விதித்துள்ளது. இவர் தான் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அன்டன் செரெபென்னிகோவ் என்ற இந்த 40 வயதான தொழிலதிபர் கடந்த சனிக்கிழமை (ஜூலை 22) ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உளவு பார்ப்பதில் கில்லாடி: செரெபென்னிகோ ஐசிஎஸ் ஹோல்டிங் என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலமே ரஷ்யாவின் உளவு அமைப்பான ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் பொதுமக்கள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணித்ததாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் பொதுமக்களை உளவு பார்க்க ஏதுவாக ரஷ்யா கடந்த 2018இல் தனியாக ஒரு சட்டத்தையே கொண்டு வந்தது.
இந்தச் சட்டம் மூலம் ரஷ்ய உளவு அமைப்பால் அதன் பொதுமக்கள் மீது அதிக கண்டிரோலை வைக்க முடியும். இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ரஷ்யாவில் இருக்கும் பல சர்வதேச செய்தியாளர்களும் கூட அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்பதை நம்பவில்லை.

யார் இவர்: ரஷ்யாவில் இருந்த டாப் பணக்காரர்களில் ஒருவர் தான் இந்த செரெபென்னிகோவ மூலம் பல நிறுவனங்களை வைத்திருக்கிறார். இதன் மூலமாகவே அவர் இணையப் பயனர்களைக் கண்காணித்து வருகிறார். இதை வைத்து அவர் ரஷ்ய மக்களின் தொலைப்பேசியைக் கூட ஒட்டுக்கேட்பதாகக் கூறப்படுகிறது. ரஷ்யாவில் இருக்கும் இணையம் டாட் ru என்று தனி டொமைனில் பிரிக்கப்பட்ட நிலையில், அதற்கான சட்டத்தை இயற்றுவதில் இவருக்கும் முக்கிய பங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவில் கடந்த சில காலமாகவே டாப் இடங்களில் இருப்போர் இதேபோல மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. சில மாதங்களில் மட்டும் இதுபோல பல பெரும் பணக்காரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உயிரிழக்க மாரடைப்பு என்பது போலக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதைப் பெரும்பாலானோர் நம்பத் தாயாராக இல்லை. ஏனென்றால் உயிரிழந்த பலரும் புதினுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது உயிரிழந்துள்ள செரெபென்னிகோ கூட புதினுடன் தொடர்பில் இருந்தவர் என்றே கூறப்படுகிறது. புதினும் ரஷ்ய அரசும் அதன் மக்களை இணையம் வாயிலாக எப்படி எல்லாம் உளவு பார்த்தார்கள் என்பது குறித்த பல சென்சிடிவ் தகவல்கள் இவருக்குத் தெரியும் என்று அந்நாட்டுச் செய்தியாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே அவரது உயிரிழப்பு பேசுபொருளாக மாறியுள்ளது.