வானத்தில் ஏறி சந்திரனை தொட்டோம்!| We climbed into the sky and touched the moon!

பெங்களூரு : வானத்தில் ஏறி சந்திர மண்டல வாசலை தொட்டுள்ளது, ‘சந்திரயான் – 3’ விண்கலம். இதில் அனுப்பப்பட்ட விக்ரம் என்று பெயரிடப்பட்டுள்ள, ‘லேண்டர்’ சாதனம், நிலவில் பத்திரமாக நேற்று தரையிறக்கப்பட்டது. அது சுமந்து சென்ற, பிரஜ்ஞான் என பெயரிடப்பட்டுள்ள, ‘ரோவர்’ வாகனம், நிலவில் கால் பதித்து, சுற்றி வந்து தன் ஆய்வுகளை துவக்கியுள்ளது. இந்திய விண்வெளி சாதனைகளில் மற்றொரு மைல்கல்லாக நேற்று படைக்கப்பட்ட நிகழ்வை, நாட்டின் 140 கோடி மக்களும் நேரலையில் பார்த்து ஆனந்த கண்ணீருடன், பெருமிதம் அடைந்தனர்; உலக விஞ்ஞானிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

அமெரிக்கா, சீனா மற்றும் முந்தைய சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் மட்டுமே, இதுவரை நிலவில் தரையிறங்கி ஆய்வுகளை செய்துள்ளன.

பல நாடுகள் முயற்சி செய்தும், நிலவில் தரையிறங்க முடியவில்லை. ரஷ்யா சமீபத்தில், ‘லுானா – 25’ என்ற விண்கலத்தை அனுப்பியது. ஆனால், கடைசி நேரத்தில், அதன் லேண்டர் சாதனம் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், நிலவில் மோதியதில் திட்டம் தோல்வியடைந்தது.

மறக்க முடியாத நிகழ்வு

இஸ்ரோ சார்பில், நிலவை ஆய்வு செய்வதற்கான முதல் முயற்சி, 2008ல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சந்திரயான் விண்கலம், நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்தது.

கடந்த 2019ல், சந்திரயான் – 2 விண்கலம் செலுத்தப்பட்டது. திட்டம் வெற்றிகரமாக அமைந்தாலும், விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் மோதியது.
சந்திரயான் – 2 தற்போதும் நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்கிறது.

அந்த நேரத்தில், இஸ்ரோ தலைவராக இருந்த சிவன் கண்ணீர் விட்டு அழுததும், அவரை பிரதமர் நரேந்திர மோடி தேற்றியதும் மறக்க முடியாத நிகழ்வாகும்.இந்தத் தோல்வியால் துவண்டுவிடாத நம் விஞ்ஞானிகள், நான்கு ஆண்டுகளாக மிகவும் திட்டமிட்டு, சந்திரயான் – 3 திட்டத்தை செயல்படுத்தினர். இதற்கு நடுவில், கொரோனாவால் திட்டப் பணிகள் இரண்டு ஆண்டுகள் பாதிக்கப்பட்டது தனிக் கதை.

‘சந்திரயான் – 2 திட்டம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று பார்த்து பார்த்து செயல்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது, தோல்வியின் அடிப்படையில், சந்திராயன் – 3 திட்டத்தை உருவாக்கியுள்ளோம். ‘ஒரு கட்டத்தில் தோல்வி அடைந்தால், அடுத்தது என்ன என்ற அடிப்படையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது’ என, இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருந்தார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ஜூலை 14ல் சந்திரயான் – 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. 41 நாட்கள் பயணத்துக்குப் பின், சந்திரயான் விண்கலம் நேற்று மாலை 6:04 மணிக்கு நிலவில் கால் பதித்தது.விண்கலத்துடன் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவில் நிலைநிறுத்தப்பட்டது.

வெளியேறிது ரோவர்

அப்போது, பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். இந்த திட்டம் சிறப்பாக வெற்றி பெற வேண்டும் என்று, பிரார்த்தனையில் ஈடுபட்ட, 140 கோடி மக்களும் ஆனந்த கண்ணீரில் மூழ்கினர்.

முதல் நாடு

நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பெற்றுத் தந்துள்ளனர். லேண்டர் சாதனம், நிலவில் தரையிறங்கும் தருணத்தை, திகிலுாட்டும் 17 நிமிடங்கள் என்று விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். இதனால், ‘திக்திக்’ மனநிலையுடன், இணையதளம், ‘டிவி’யில் மக்கள் நேரலையில் தரையிறங்கும் நிகழ்வை பார்த்தனர்.

லேண்டர் சாதனம் திட்டமிட்டபடி தரையிறங்கியது. அதற்கு மூன்றரை மணி நேரத்துக்குப் பின், ஆறு சக்கரங்களுடன் கூடிய பிரஜ்ஞான் ரோவர் சாதனம், உள்ளே இருந்து மெதுவாக எட்டிப் பார்த்தது. உலக விஞ்ஞானிகளுக்கு புது புது தகவல்களை அளிக்க உள்ள பிரஜ்ஞான் ரோவர் சாதனம், மெதுவாக நிலவின் மேற்பரப்பில் இறங்கியது.

நிலவின் மேற்பரப்பில், ஒரு நிலவு நாள், அதாவது, 14 பூமி நாட்கள் மட்டுமே செயல்பட முடியும் என்பதால், இறங்கிய வேகத்தில், தன் ஆய்வுப் பணிகளை பிரஜ்ஞான் துவக்கியுள்ளது.

மொத்தம், 600 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான் – 3 திட்டத்தால், சந்திரனைத் தொட்டுள்ளோம். இந்திய விண்வெளி சாதனைகளின் மகுடம்.

அன்று சைக்கிளுக்கு கேலி இன்று சைக்கிள் போல ‘ஈசி’

‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், 1962ல் உருவாக்கப்பட்டது. அதற்கடுத்த ஆண்டில் முதல் ராக்கெட் செலுத்தப்பட்டது. அந்த ராக்கெட்டின் பாகங்கள், சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்டன; உலக நாடுகள் கேலி செய்தன. தற்போது ராக்கெட் அனுப்புவது, சைக்கிளில் செல்வது போன்று மிகவும் சுலபமான வித்தை என்பதை, நம் விஞ்ஞானிகள் உலக நாடுகளுக்கு சுட்டிக் காட்டியுள்ளனர்.

அடுத்தடுத்து திட்டங்கள் தயாராகிறது இஸ்ரோ

அடுத்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக, ‘ஆதித்யா எல்1’ என்ற விண்கலம் செப்., முதல் வாரத்தில் ஏவப்பட உள்ளது. பருவநிலையை கண்காணிக்கும், ‘இன்சாட்3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. மேலும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் கனவு திட்டமான, ‘ககன்யான்’ திட்டத்தின் சோதனை அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்க உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.