சதுப்பு நிலங்களில் எவ்வித ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்கக் கூடாது: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை காரப்பாக்கம் பகுதியில் சதுப்பு நிலத்தை இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு ஒது்ககிய வருவாய்த் துறை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த நிலத்தை மீட்டு பராமரிக்கவும், சதுப்பு நிலங்களில் எந்தவிதமான ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை காரப்பாக்கத்தில் பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய 38 ஏக்கர் நிலப்பகுதியை, சதுப்பு நிலம் என வருவாய்த் துறை வகைப்படுத்தியது. அதில் 8 ஏக்கர் அளவுக்கு, தரமணியில் செயல்பட்டுவரும் இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு மாற்றம் செய்து கடந்த 2014-ம் ஆண்டு மே 16-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த இயற்கை அறக்கட்டளையின் நிறுவனர் ஐ.ஹெச்.சேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், பக்கிங்ஹாம் கல்வாயில் இருந்து வரும் உபரி நீர், துரைப்பாக்கம் – ஒக்கியம் கால்வாய் வழியாக வரும் தண்ணீரை சேகரிக்க பயன்படும் சதுப்பு நிலப் பகுதியை, பாதுகாக்க வேண்டிய அரசே, அந்நிலத்தை புள்ளியியல் நிறுவனத்துக்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சதுப்பு நிலத்தை இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு ஒதுக்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு மாற்று இடம் ஒதுக்க வருவாய்த் துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.மேலும், அந்த நிலத்தை மீட்டு, பராமரிக்க வேண்டும். சதுப்பு நிலத்தில் எந்தவிதமான ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்கக் கூடாது என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.