`பிரமாண்டத் திருக்கோயில்'- 7 நிலை கோபுரம்; இன்று கும்பாபிஷேகம் காணும் அவிநாசி திருத்தலச் சிறப்புகள்!

சுந்தர்மூர்த்தி நாயனார்… சைவம் தழைக்க மண்ணுலகில் தோன்றிய சிவத்தின் பிம்பம். தோழமை பாவத்தோடு அந்தப் பரமனைப் பாடிப் பணிந்த புண்ணியன். பித்தா என்று பெருமானை அழைக்கும் பேறுபெற்றவர். அவர் தன் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். அவற்றில் ஒன்று நடந்த தலம்தான் அவிநாசி.

புராண காலத்தில் இத்தலத்தின் திருப்பெயர் திருப்புக்கொளியூர். தட்சிண காசி என்றும் இதற்குப் பெயர். இங்கே ஈசன் அவிநாசியப்பராக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அம்பிகை ஶ்ரீகருணாம்பிகை என்ற திருநாமத்தோடு எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இந்தத் தலத்தின் காலம் மிகவும் பழைமையானது. புராண காலத்தில் பிரம்மா நூறு ஆண்டுகளும், இந்திரனின் யானை ஐராவதம் 12 ஆண்டுகளும், தாடகை மூன்று ஆண்டுகளும், நாகக் கன்னி 21 மாதங்களும் ஈசனை வழிபட்டு நற்பேறுபெற்றனர் என்கிறது தலபுராணம்.

அப்படிப்பட்ட அந்த ஆலயத்தில் தற்போது இருக்கும் திருக்கோயில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 7 நிலைகளோடு கம்பீரமாக 100 அடி உயரம் கொண்டு எழுந்து நிற்கிறது. தற்போது உள்ள இந்த ஆலயம் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னால் கொங்குச் சோழனால் கட்டப்பட்டது என்கிறார்கள். அதன்பின் மைசூர் மகாராஜா இந்தத் தலத்தைப் புனரமைத்தார் என்கிறார்கள். அப்படிப்பட்ட தொன்மையான தலத்தில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நாளில் இத்தலத்தில் சுந்தரர் நிகழ்த்திய அற்புதம் குறித்து அறிந்துகொள்வோம்.

அவிநாசியப்பர் கருணாம்பிகை

சுந்தரமூர்த்தி நாயனார், தன் தோழரான சேரமான் பெருமானைச் சந்திக்கச் சென்றார். அப்போது, அவிநாசி தலத்துக்கும் வந்தவர், வழியில் ஒரு தெருவைக் கடக்கும்போது, எதிரெதிர் வீடுகளில் இருந்து ஒன்றுக்கொன்று மாறாக எழுந்த சத்தத்தைக் கேட்டார்.

‘ இங்கு என்ன நடக்கிறது?’ என்று ஆச்சர்யத்துடன் விசாரித்தார் சுந்தரர்.

அதற்கு அந்த ஊர் மக்கள், ” மூன்று வருடங்களுக்கு முன்பு, சம வயது கொண்ட இரு சிறுவர்கள் அருகில் உள்ள குளத்துக்கு நீராடப் போயினர். மகிழ்ச்சியும் குதூகலமுமாக குளித்துக் கொண்டிருந்தபோது, முதலை ஒன்று பாய்ந்து சிறுவன் ஒருவனை விழுங்கிவிட்டது.

தப்பிப் பிழைத்த மற்றொரு சிறுவனுக்கு இன்று உபநயனம். அந்த வீட்டிலிருந்து மங்கல ஓசை கேட்கிறது. ‘என் மகன் உயிரோடு இருந்திருந்தால், அவனுக்கு இந்நேரம் உபநயனம் பண்ணிப் பார்த்திருப்போமே…’ என்று அழுகைக் குரல் எதிர் வீட்டில் இருந்து கேட்கிறது, இறந்த சிறுவனின் வீட்டிலிருந்து… என்ன செய்வது இதுதானே இந்த உலகத்தின் இயற்கை?” என்று கூறினர்.

சுந்தரர் மனம் கசிந்தது. “எங்கே அந்தக் குளத்தைக் காட்டுங்கள்” என்று ஊர் மக்களிடம் கேட்டார். அனைவரும் அவரைக் குளக்கரைக்கு அழைத்துச் சென்றனர். குளம் வறண்டு கிடந்தது. அதில் எந்த உயிர்களும் இல்லை.

நீர்ஏறு நிமிர்புன்சடை நின்மல மூர்த்தியைப்

போர்ஏறு அதுஏறியைப் புக்கொளியூர் அவிநாசியைக்

கார்ஏறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதிய

சீர்ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே!’

என்று சுந்தரர் மனம் உருகிப் பாடத்தொடங்கினார். அவர் பதிகம் பாடி முடித்ததும் குளத்துக்குள் நீர் பெருகியது. சில நிமிடங்களில் குளம் நிரம்பித் ததும்பியது. எங்கிருந்தோ ஒரு முதலை ஒன்று அங்கே தோன்றியது. தன் அகன்ற வாயைப் பிழந்தது. அதிலிருந்து ஏழுவயது சிறுவன் ஒருவன் வெளியே வந்தான்.

அவிநாசி – சுந்தரர்

இந்த அற்புதங்களைக் கண்ட ஊர் மக்கள் சிலிர்த்துப் போயினர். சுந்தரரையும் சிவபெருமானையும் துதித்துப் போற்றினர். சுந்தரர் அந்தச் சிறுவனை அழைத்துக்கொண்டு ஊருக்குள் சென்று அவனுக்குத் தானே உபநயனம் செய்வித்தார். இப்படிப்பட்ட அற்புதம் நிகழ்ந்த இந்தத் தலத்தில் இன்றும் வேண்டி வருபவர்களின் குறைகள் தீர்கின்றன.

மாணிக்கவாசகரும் திருமூலரும் அருணகிரிநாதரும் இங்கு வந்து ஆனந்தமாகப் பாடி, இறைவனைத் தொழுதிருக்கிறார்கள். காசிக்கு நிகரான தலம் இது. இங்குள்ள கிணற்றில் கங்கை ஐக்கியம் ஆகியிருப்பதாகத் தலபுராணம் சொல்கிறது. எனவே இத்தலத்தில் உள்ள காலபைரவர் சந்நிதி மிகவும் உயர்வானதாகக் கருதப்படுகிறது. இங்கே தேய்பிறை அஷ்டமி நாளில் வந்து வழிபாடுகள் செய்தால் சகல துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம் மலர்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.

திருவாரூர்த் தேருக்கு அடுத்து அவிநாசியப்பரின் திருத்தேர் பிரமாண்டம் எனப் போற்றப்படுகிறது. சித்திரை மாதத்தில், 12 நாள்கள் நடைபெறும் விழாவை பிரம்மாவின் தவம் எனச் சொல்வார்கள். தவிர, ஆடி மாதத் தில் ஆடித்தபசு விழாவும் இங்கு பிரசித்தம். அறுபத்து மூவர் உற்சவமும் அடியார்களால் இங்கே சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன.

சுவாமிக்கு வலது பக்கத்தில் அம்பாள் சந்நிதி கொண்டிருக்கும் ஆலயங்களில் இதுவும் ஒன்று. இங்கே.அழகே வடிவானதுபோல் அம்பிகை கருணை பொழியும் முகத்துடன் காட்சியருள்கிறாள். அம்பாள் சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேளுக்கு விளக்கேற்றி வழிபடுகின்றனர், பக்தர்கள். அப்படி வழிபட்டால், விஷ ஜந்துக்களின் கடியில் இருந்து தப்பலாம்; விஷ ஜந்துக்களால் வருகிற கனவு, பயம் ஆகியவற்றில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

அவிநாசி தேள் வழிபாடு

இப்படிப் பல விசேஷங்கள் நிறைந்த இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெறும் இந்த நல்ல நாளில் நாம் இருக்கும் இடத்தில் இருந்து அந்த அவிநாசியப்பரை மனதாரப் போற்றுவோம். வாழ்வில் நமக்கு சகல நலன்களையும் அவர் அருள்வார் என்று நம்பலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.