ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கார் ஓட்டுநரை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசிய போலீஸார், “மதுரை மாவட்டம் பைக்காரா பகுதியை சேர்த்தவர் முருகன்(வயது 68). இவருக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். மதுரை ரயில் நிலையம் பகுதியில் டாக்ஸி நிறுத்துமிடத்தில் வாடகைக்கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில், கடந்த புதன்கிழமை அதிகாலை, அடையாளம் தெரியாத நபர்கள் 3 பேர் வந்து விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி கோயிலுக்கு செல்ல வேண்டும் என கூறிக் ஓட்டுனர் முருகனின் காரை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

தொடர்ந்து, அந்த 3 பேரையும் காரில் ஏற்றிக்கொண்டு மதுரை ரயில் நிலையத்திலிருந்து முருகன் காரில் புறப்பட்டுள்ளார். இந்தநிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அத்திக்குளம் அடுத்த சோழங்குளம் கண்மாய் பகுதியில் முருகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். காரும் மாயமாகியிருந்தது. இதுகுறித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அசோக்நகரை சேர்ந்த ருக்சனா பர்வீன் என்பவர் தனது மகள் ஜெசிரா பானுவை, தனது மருமகனான நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் என்பவர் அவரின் நண்பர்களுடன் வந்து காரில் வந்து கடத்திச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
எனவே, வாடகை கார் ஓட்டுனர் முருகன் கொலை செய்யப்பட்டதற்கும், ஜெசிரா பானு கடத்தலுக்கும் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸ் விசாரணை நடத்தியதில், முகமது அசாருதீன் தான் தனது நண்பர்களுடன் மதுரையில் இருந்து காரை வாடகைக்கு எடுத்து வந்து, கார் ஓட்டுநர் முருகனை கொலை செய்துவிட்டு ஜெசிரா பானுவை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து செல்போன் எண் மற்றும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் திருநெல்வேலியில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து திருநெல்வேலி விரைந்த தனிப்படை போலீஸார், அங்கு பதுங்கியிருந்த முகமது அசாருதீன்(26) மற்றும் அவரின் நண்பர்களான ஸ்ரீவில்லிப்புத்தூர் நல்ல குற்றாலம் தெருவை சேர்ந்த தங்க மாரியப்பன் (22), சிவகாசி பள்ளப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் (26) ஆகிய மூன்று பேரையும் சுற்றிவளைத்து பிடித்த தனிப்படை போலீஸார் அவர்களின் பிடியில் இருந்த ஜெசிரா பானு(26)-யும் மீட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அதன்படி, “நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தன் மனைவி ஜெசிரா பானுவுடன் விருதுநகர் மாவட்டம் வந்தபோது, கூமாப்பட்டியில் செல்போன் கடையில் திருடிய வழக்கில் முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சிறையிலிருந்து அவர் வெளியே வந்ததும், ஜெசிரா பானுவை அவரின் பெற்றோர் அசாருதீன் உடன் அனுப்ப மறுத்துள்ளனர். இந்நிலையில் ஜெசிரா பானு தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை எப்படியாவது இங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு கூறியிருக்கிறார்.

இதன்பொருட்டு முகமது அசாருதீன் தனது நண்பர்களான தங்க மாரியப்பன், விக்னேஷ் ஆகியோருடன் மதுரையில் இருந்து வாடகைக்கு கார் எடுத்துக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்துள்ளார். தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சியடிவாரமான செண்பகத்தோப்பு பகுதிக்கு சென்ற அவர்கள், அங்கு வைத்து கார் ஓட்டுனர் முருகனை கொலை செய்து, உடலை எடுத்துவந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சோழங்குளம் கண்மாயில் வீசியுள்ளனர். இதையடுத்து அந்த வாடகை காரையே திருடிக்கொண்டு அசோக் நகர் சென்ற அசாருதீன், தனது மாமனார்-மாமியாரிடம் தகராறு செய்ததுடன் மனைவி ஜெசிரா பானுவை கடத்துவதுபோல் அங்கிருந்து காரில் அழைத்துச் சென்றுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து காரில் கிளம்பிய அவர்கள், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் பகுதிக்கு சென்றிருக்கின்றனர்.

அங்கு காரை அடையாளம் கண்டுக்கொண்ட மதுரையை சேர்ந்த மற்றொரு வாடகைக் கார் ஓட்டுநர், அசாருதீனிடம் கார் குறித்து விசாரித்துள்ளார். இதற்கு பதில் சொல்லி சமாளித்ததுடன் அங்கிருந்த தப்பிச்சென்று காரை வேறொரு பகுதியில் நிறுத்திவிட்டு, வள்ளியூருக்கு பஸ்ஸில் சென்றுள்ளனர். இந்தநிலையில் தகவலறிந்து விரைந்த தனிப்படை போலீஸார், திருநெல்வேலி சென்று தங்க மாரியப்பன், விக்னேஷ் ஆகியோரை முதலில் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கிருந்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு சென்ற போலீஸார், அங்கிருந்து வெளியூர் தப்பமுயன்ற முகமது அசாருதீன் மற்றும் ஜெசிராபானு இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 4பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY