“மக்களை ஏமாற்றுவதில் விஞ்ஞான மூளை படைத்தவர் ஸ்டாலின்” – இபிஎஸ் சாடல் @ ராணிப்பேட்டை 

ராணிப்பேட்டை: “தமிழகத்தில் இதற்கு முன் ஒரு காவல் துறை டிஜிபி இருந்தார் சைலேந்திர பாபு. அவர் கஞ்சா கடத்தலை தடுப்பதற்காக ஆபரேஷன் 2.O, 3.O என்று ஓ போட்டுக் கொண்டே, ரிட்டையர்ட் ஆகி சென்றுவிட்டார். கஞ்சா ஆபரேஷன் என்றுகூறி ஒரு டிஜிபி எதுவுமே செய்யவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. கொலை, கொள்ளை, வழிப்பறி என தமிழகத்தில் நடக்காத நாளே கிடையாது” என்று ராணிப்பேட்டையில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து, ராணிப்பேட்டை மாவட்டம் பாண்டியநல்லூரில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: “பெட்டி வாங்குவதில் எல்லாம் திமுககாரர்கள் கில்லாடிகள். எப்படி எல்லாம் ஏமாற்றுகின்றனர்!

சதுரங்க வேட்டை படத்தில் ஒரு வசனம் வரும். அதுகுறித்து நான் பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன். இருந்தாலும், அது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால், அதை சொல்லியே ஆகவேண்டும். ஒருவரை ஏமாற்றம் வேண்டும் என்றால் ஆசையை தூண்ட வேண்டும்.அப்படி பொதுமக்களின் ஆசையைத் தூண்டி, மனுக்களைப் பெற்று, வீட்டில் கொண்டுபோய் வைத்துவிட்டு முதல்வர் ஏமாற்றினார். அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதா, அந்த மனுக்கள் இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை.

ஏழை மக்கள் பாவம். மனுக்களை எழுதி பெட்டியில் போட்டால், தங்களுடைய பிரச்சினைகள் தீரும் என்று நம்பினர். அந்த மனுக்களுக்கு என்ன பதில் என்றே தெரியாமல் போய்விட்டது. இப்படியெல்லாம், மக்களை கவர்ச்சியாக ஏமாற்றக்கூடிய விஞ்ஞான மூளைப் படைத்தவர்தான் இன்றைய முதல்வர் ஸ்டாலின். நல்லது செய்வதற்கு எல்லாம் அவருடைய விஞ்ஞான மூளையை பயன்படுத்துவது இல்லை. எந்தெந்த வழிகளில் எல்லாம் மக்களை ஏமாற்ற முடியுமோ, அந்தந்த வழிகளில் மக்களை ஏமாற்றுவதற்கு அவ்வப்போது, விஞ்ஞான மூளையைப் பயன்படுத்தி, மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த கட்சி திமுக.

நான் மோடியை எதிர்க்க மாட்டேன் என்றும் அவருக்கு பயந்து கொண்டிருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். நாங்களா ஆட்சியில் இருக்கிறோம்? அவரை எதிர்ப்பதற்கு. ஆட்சியில் இருப்பவர்கள்தானே எதிர்க்க முடியும். எதிர்க்கட்சியாக இருக்கும் நாங்கள் எப்படி எதிர்க்க முடியும்? நான் முதல்வராக இருந்து, தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர முற்பட்டால், நாங்கள் கண்டிப்பாக எதிர்ப்போம். யாராக இருந்தாலும் எதிர்த்து குரல் கொடுப்போம்.

உதாரணத்துக்கு காவிரி நதி நீர் பிரச்சினை. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக அரசு நிறைவேற்றவில்லை. அப்போது அதிமுக பாஜக கூட்டணியில் இருந்தது. பலமுறை கூறினோம். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவர்கள் அமல்படுத்தாததால், அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து 22 நாட்கள் அவையை ஒத்திவைத்த கட்சி அதிமுக. 22 நாட்கள் நாடாளுமன்றம் நடக்கவில்லை. இது அதிமுகவின் வலிமையைக் காட்டுகிறது. நாங்கள் கொடுத்த அழுத்தத்தால் மத்திய பாஜக அரசு பணிந்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணைய நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டது. இதுதான் அதிமுகவின் சாதனை. திமுகவைப் போல நீட் தேர்வு என்றுகூறி மக்களை ஏமாற்றுகிற கட்சி அதிமுக அல்ல. நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்தால்தான் அதை ரத்து செய்ய முடியும். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 38 எம்பிக்கள், நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்திருந்தால், நீட் தேர்வுக்கு விடிவுகாலம் பிறந்திருக்கும். அதை செய்யவில்லை. அதை வைத்துக்கொண்டே 5 ஆண்டு காலம் காலத்தை ஓட்டிய கட்சி திமுக. திமுக நாட்டு மக்கள் பயனடைவதற்காக கட்சி நடத்திவில்லை. விளம்பரத்துக்காக கட்சி வைத்துள்ளனர்.

தமிழகத்தில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 40 சதவீதம் பேர் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். கிட்டத்தட்ட 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். அவர்களால் மருத்துவர்களாகவும், பல் மருத்துவர்களாகவும் ஆக முடியவில்லை. அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும், பொதுமக்களும் கோரிக்கை வைக்கவில்லை. என் சிந்தனையில் உதித்தது. ஏழை மாணவர்களும் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும், பல் மருத்துவராக வேண்டும். அதற்காக, 7.5% உள் இடஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்து அமல்படுத்தியது அதிமுக. இன்றைக்கு அதன்மூலம் 2,160 பேர் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகள் மருத்துவப் படிப்புகளை படிக்கின்றனர்.

இதுபோல் ஒரு சாதனையாவது உங்களது ஆட்சியில் செய்ய முடிந்ததா? நான் கட்டிய பாலத்தில் சென்று ரிப்பன் வெட்டி திறக்கிறீர்கள். எந்த திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்துனீர்கள்?

முதல்வர் ஸ்டாலின் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தமிழகத்தில் போதைப்பொருட்கள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. இதற்கு முன் ஒரு காவல்துறை டிஜிபி இருந்தார் சைலேந்திரபாபு. அவர் கஞ்சா கடத்தலை தடுப்பதற்காக 2.O, 3.O என்று ஓ போட்டுக் கொண்டே, ரிட்டையர்ட் ஆகி சென்றுவிட்டார். கஞ்சா ஆபரேஷன் என்றுகூறி ஒரு டிஜிபி எதுவுமே செய்யவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. கொலை, கொள்ளை, வழிப்பறி என தமிழகத்தில் நடக்காத நாளே கிடையாது” என்று அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.