Shruti Haasan: "அவங்க நல்லா சமைப்பாங்க!" – ஸ்ருதி ஹாசனின் சர்ப்ரைஸ் விசிட் குறித்து இயக்குநர் பத்ரி

இயக்குநர் பத்ரி வெங்கடேஷின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். பத்ரியின் வீட்டிலிருந்த அவரது பெற்றோர் ஸ்ருதியின் வருகையால் ஆச்சரியமாகி மகிழ்ந்துள்ளனர். இந்த மகிழ்ச்சியை தன் சமூக வலைத்தளப் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார் பத்ரி வெங்கடேஷ்.

ஸ்ருதிஹாசன்

அதர்வா நடித்த ‘பாணா காத்தாடி’, ‘செம போத ஆகாத’, ‘பிளான் பண்ணி பண்ணனும்’ ஆகிய படங்களை இயக்கியவர் பத்ரி வெங்கடேஷ். ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதி வரும் அவர், விரைவில் அவற்றை புத்தகமாகப் கொண்டு வரும் வேலைகளிலும் இறங்கியிருக்கிறார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு ஸ்ருதிஹாசன் வருகை தந்திருக்கிறார். சர்ப்ரைஸான பத்ரியின் பெற்றோர்கள் ஸ்ருதியை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள். ஸ்ருதிஹாசனின் விசிட் குறித்து இயக்குநர் பத்ரி வெங்கடேஷிடம் பேசினேன்.

பத்ரி வெங்கடேஷ்

“என் முதல் படம் பண்றதுக்கு முன்னாடி இருந்தே, ஸ்ருதியை தெரியும். ரொம்பவும் நெருங்கிய தோழி. சன் டி.வி.யில் ஒளிப்பரப்பான ‘ஹலோ சஹோ’ ஷோ, ஸ்ருதியோட முதல் டி.வி.ஷோ. அந்த ஷோவோட இயக்குநர் நான். அதிலிருந்தே நாங்க நல்ல நண்பர்களாகிட்டோம். சென்னையிலிருந்தால் எங்க வீட்டிற்கு வருவாங்க. என் மனைவி, குழந்தைகளையும் அவருக்கு நல்லா தெரியும்.

போன வருஷம் நான் மும்பை போயிருந்தப்ப, ஸ்ருதியின் வீட்டிற்குப் போயிருந்தேன். ரொம்பவும் ஆச்சரியம். சாம்பார், ரசம், பொறியல், கூட்டுனு அவங்களே நல்லா சமைச்சு கொடுத்தாங்க. நம்ம வீட்டுச் சாப்பாடு அவ்ளோ அழகா சமைக்கிறாங்க. அவங்களுக்கு இவ்ளோ சமையல் தெரியும் என்பதே எனக்கு ஆச்சரியம்தான். அப்ப அதை எங்க அம்மாகிட்டச் சொன்னேன். ஒருமுறை எங்க அம்மா ஸ்ருதிக்கு கறிவேப்பிலை தொக்கு எப்படிப் பண்ணணும்னு சொல்லிக் குடுத்தாங்க. அதை கவனமாகக் கேட்ட ஸ்ருதி, அவங்க அம்மாவுக்குச் செய்து கொடுத்து, சரிகா மேம்கிட்ட பாராட்டும் வாங்கினாங்க.

பத்ரியின் பெற்றோருடன் ஸ்ருதி

நான் முப்பது வருஷமா டி.வி., சினிமா துறையில் இருந்தாலும் கூட, எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே பிரபலங்களை பார்த்து ஆச்சரியமானதில்லை. ஸ்ருதி திடீரென எங்க வீட்டிற்கு வந்திருந்தாங்க. மதியம் சாப்பிட்டாங்க. எங்க அம்மாவோட சமையல் அவங்களுக்கு ரொம்பவும் பிடிச்சிடுச்சு. சாப்பிட்டதும், சாப்பிட்ட தட்டை, பாத்திரங்களை ஸ்ருதியே க்ளீன் பண்ணினதைப் பார்த்து எங்க அம்மாவுக்கு ஆச்சரியமாகிடுச்சு. ‘இதுல என்ன ஆச்சரியம்மா… நான் சாப்பிட்டதை சுத்தம் செய்தேன்’னு ஸ்ருதி சொன்னாங்க. கமல் சாரோட பொண்ணு இவ்ளோ எளிமையா இருக்கேன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. ஸ்ருதி எங்க அம்மாகிட்டே சமையல் டிப்ஸ் எல்லாம் கேட்டு வாங்கி நோட் பண்ணிக்கிட்டாங்க.

ஸ்ருதி வீட்டை விட்டுக் கிளம்பறப்ப எங்க அம்மா அவங்களோட புகைப்படம் எடுத்துக்கணும்னு விரும்பினாங்க. அப்படி எடுத்ததுதான் இந்த போட்டோ” என முகம் மலர்ந்து சொல்கிறார் பத்ரி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.