`போராடியும் திமுக-வில் வாய்ப்பு கிடைக்கல!’ -சைகையால் வாக்கு சேகரிக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் 31-வது வார்டு போஸ்நகரைச் சேர்ந்தவர் கண்ணன். திமுகவின் தீவிர விசுவாசி. 45 வருடங்கள் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். இவரின் மகன் சுப்பிரமணியன், மருமகள் சரிதா ஆகிய இருவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். இவர்கள் இருவரும் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக திமுகவில் இருக்கின்றனர். இந்த நிலையில் தான், 31-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அதில் போட்டியிட சரிதா விருப்பப்பட, அதற்காக திமுக கட்சித் தலைமையிடம் ரூ.2,500 கட்டணம் செலுத்தி விருப்ப மனு அளித்திருக்கின்றனர். ஆனாலும், நேர்காணலில் மாற்றுத்திறனாளி என்பதைக் காரணம் காட்டி திமுகவினர் சரிதாவைப் புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது.

மாவட்டச் செயலாளர், திமுக முக்கிய நிர்வாகிகளை கண்ணன் சந்தித்த போதும் சீட் இல்லை என்று மறுத்துவிட்டனர். இந்த நிலையில், தான் 31-வது வார்டில் சுயேச்சையாகக் களமிறங்கியிருக்கிறார் சரிதா. சுப்பிரமணியனும், சரிதாவும் சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டவர்கள். இரு சமூகத்தினரின் குடும்பத்தினர் புடைசூழ கணவனும், மனைவியும் மக்களிடம் சைகையில் பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர். இருவரும் வார்டு முழுவதும் சைகையில் பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

சுப்பிரமணியனின் சகோதரர் மணியிடம் பேசினோம்,
“அப்பா ரொம்ப வருஷமாவே திமுகவுல உறுப்பினரா இருக்காரு. தீவிர விசுவாசியும் கூட. எங்க அண்ணன், அண்ணி ரெண்டு பேரும் மாற்றுத்திறனாளிகள். நானும் ஒரு மாற்றுத்திறனாளி. குடும்பமே திமுக குடும்பம். அண்ணி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். அண்ணியை அண்ணன் சமூக தீர்த்திருத்த திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தான், இந்தமுறை உள்ளாட்சித் தேர்தலில் எங்க வார்டு பெண்கள் வார்டுங்கிறதால, அண்ணி போட்டியிட திமுகவில் வாய்ப்பு கேட்டிருந்தோம். ஆனால், போராடிப் பார்த்தும் கடைசி வரை வாய்ப்பு வழங்கவில்லை. மாற்றுத்திறனாளிகள் என்று கூறி எங்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணித்துவிட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற அரசாணையே இருக்கிறது. ஆனால், யாரும் அதை கடைபிடிக்க முயற்சி கூட செய்யலை. வேறு வழியில்லாமல் தற்போது சுயேச்சையாக களமிறங்கியிருக்கிறோம். வாய் பேச முடியாத காது கேட்காதவர் வெற்றி பெற்றால், மக்கள் பிரச்னைகளை எவ்வாறு சரிசெய்வார் என்று சிலர் கேட்கின்றனர். எழுத்துப்பூர்வமாக நகராட்சியில் வாதாடி மக்கள் பிரச்னைகளை, தேவைகளைப் பூர்த்தி செய்யும் வழி இருக்கிறது என்பதைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறோம்.

அண்ணன், அண்ணி என இரண்டு சமூகத்தினரும் எங்களுக்கு ஆதரவு கொடுக்கிறாங்க. வார்டு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. கண்டிப்பாக, 31வது வார்டில் வெற்றியை ஈட்டுவோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.