தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓபிஎஸ், அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அதிமுக செயலாளர் சையது கான் தலைமை தாங்கினார். தேர்தல் தோல்வி காரணமாக சசிகலா, டி.டி.வி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று தேனி அதிமுக மாவட்டச் செயலாளர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கட்சியில் சேர்ப்பது தொடர்பாக ஒட்டுமொத்த அதிமுகவும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த அதிமுகவின் முடிவு வந்த பிறகுதான், எனது முடிவை அமமுக தொண்டர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பேன்.
அமமுகவின் தொண்டர்களே எஜமானர்கள். என்னால் எந்த முடிவும் தன்னிச்சையாக எடுக்க முடியாது. நாங்கள் தவறு செய்யவில்லை. அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவதுதான் அமமுகவின் லட்சியம். சுயபரிசோதனை செய்ய வேண்டிய இடத்தில் அதிமுகவினர் தான் உள்ளனர். அதன் விளைவாகத் தான் அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். திமுக என்ற தீய சக்தியை எதிர்த்துப் போரிட நான் முழுமூச்சுடன் போராடுவேன்” என்றார்.