மோட்டார் வாகன சட்ட விதிகளை கடுமையாக பின்பற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சிறுவர்கள் வாகனம் ஓட்டாமல் இருப்பதையும், மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை தி. நகர் நடேசன் சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டிச்  சென்ற இளைஞருக்கு ஏற்பட்ட விபத்தில் கை, கால், முகம் என உடல் முழுதும் காயங்கள் ஏற்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்கள் சிகிச்சை பெற்றார். 

விபத்தால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவனுக்கு இழப்பீடு வழங்க இன்சுரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடக்கோரி மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் , மோட்டார் வாகன சட்டத்திற்கு முரணாக 18 வயது பூர்த்தியாகாத சிறுவன் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து என்பதால், இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை ரத்து செய்து, தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு இழப்பீடு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறுவன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நீதிபதி எஸ். கண்ணம்மாள் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, காப்பீட்டு நிறுவனம் தரப்பில், 18 வயது பூர்த்தி ஆகாதவர்கள் வாகனத்தை இயக்கக் கூடாது என சட்டவிதிகள் உள்ளது. அதை மீறி சிறுவன் வாகனம் ஓட்டியபோது ஏற்பட்ட விபத்தில் இழப்பீடு வழங்க முடியாது என்றும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

காப்பீட்டு நிறுவனத்தின் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இழப்பீடு கோரி தாக்கல் செய்த சிறுவன் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேசமயம் இந்த வழக்கில் இழப்பீடு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டால், சிறுவர்கள் வாகனம் ஓட்டி ஏற்படும் விபத்துகளில் இழப்பீடு தொடர்பான வழக்குகள் அதிகரித்து விடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது தமிழகத்தில் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி, அதை ஊக்குவிக்க கூடாது என்றும் மோட்டார் வாகன சட்டத்தின்படி 18 வயதுக்குக் குறைவானவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில் சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.