கர்நாடக கோயில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபரிகள் தடை செய்யப்பட்டிருப்பது ஏன்?

கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1997-ன் கீழ் 2002-ல் பிறப்பிக்கப்பட்ட விதியின்படி, இந்துக்கள் அல்லாதவர்கள் கோயில் வளாகங்களில் கடைகள் வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்று கர்நாடக பாஜக அரசு, கோயில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளை நியாயப்படுத்தியுள்ளது.

விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி), பஜ்ரங் தள், ஸ்ரீராம் சேனா போன்ற வலதுசாரி குழுக்களின் அழைப்பின் விளைவாக, கர்நாடகா முழுவதும் உள்ள கிராமங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகள் கடைகளை வைப்பதைத் தடுக்க வேண்டும் என்று கடந்த பதினைந்து நாட்களில், தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் ஷிவமோகா போன்ற சில வகுப்புவாத உணர்ச்சி மிக்க பகுதிகளில் உள்ள சில கோயில்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வகுப்புவாத விலக்குதல் அம்மாநிலத்தில் கிராம அளவில் மக்களின் வாழ்க்கை மற்றும் வணிகத்தின் சமூக கட்டமைப்பை பாதிக்கும் சாத்தியம் உள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலையத்துறை சட்டம், 1997-ன் கீழ் 2002-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதியின்படி, இந்துக்கள் அல்லாதவர்கள் கோவில் வளாகங்களில் கடைகள் வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்று கூறி, கர்நாடகாவில் உள்ள பாஜக அரசு, கோயில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நியாயப்படுத்தியுள்ளது. சர்ச்சையின் மையமாக இருக்கும் கோவில் திருவிழாக்கள் குறிப்பிட்ட பகுதிகளின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அங்கே திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. மேலும் அவை பொதுவாக சாதி மற்றும் மதங்களைக் கடந்து மக்களால் கொண்டாடப்படுகின்றன.

கர்நாடகாவில் ஆண்டுதோறும் நடைபெறும் உள்ளூர் கோயில் திருவிழாக்களின் தன்மை என்ன?

கர்நாடகாவில், ஆண்டுதோறும் உள்ளூர் திருவிழாக்கள் கோயில்களிலும், உருஸ் எனப்படும் தர்காக்களிலும், பெரும்பாலான கிராமப்புறங்களில் உள்ள தேவாலயங்களிலும் நடத்தப்படுகின்றன. அவை உள்ளூர் கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் பிரதிநிதித்துவம் என்றும் இத்தகைய கண்காட்சிகள் பண்டைய புனித நூல்களிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். முன்னாள் அகழ்வாராய்ச்சி இயக்குநரும், மைசூர் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற தலைவருமான பேராசிரியர் என். எஸ். ரங்கராஜுவின் கருத்துப்படி, இந்த கண்காட்சிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தின் கலாச்சாரத்தின் அடையாளம். இதற்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இது விவசாயம் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் மக்களைப் பற்றியது” என்று ரங்கராஜு கூறுகிறார்.

இரண்டு வகையான கோயில் திருவிழாக்கள் உள்ளன – ஒன்று மத நெறிமுறைகளின்படியும் கடுமையான விதிகள் இல்லாமலும் நடத்தப்படுகிறது. விதிமுறைகளைப் பின்பற்றும் திருவிழாக்கள் பெரும்பாலும் உயர் சாதியினர் கோயில்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மேலும், அத்தகைய விதிகள் எதையும் பின்பற்றாதவை பிற்படுத்தப்பட்ட வகுப்பு சமூகங்களால் நடத்தப்படுகின்றன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மாரம்மா கோவில் திருவிழா ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

பல கிராமங்கள் தங்கள் சொந்த உள்ளூர் தெய்வங்களைக் கொண்டிருப்பதால், கோயில் திருவிழாக்கள் இந்த தெய்வங்களுக்கு வழிபாடு செய்ய வருடாந்திர நிகழ்வுகளாக உள்ளன. உள்ளூர் தெய்வத்திற்கு வழிபாடுகள் செய்வதைத் தவிர, திருவிழாக்கள் உள்ளூர் கலாச்சாரத்தின் மாற்றம், மக்கள் பழகுவதற்கான இடம் மற்றும் கிராமவாசிகளுக்கு அவர்களின் விவசாய வாழ்க்கையின் கஷ்டங்களில் இருந்து ஒரு கொன்டாட்டமாக இருக்கிறது. ரங்கராஜுவின் கருத்துப்படி, “நகர்ப்புறங்களுக்குச் செல்லும் மக்கள் தங்கள் கிராமங்களுக்கு திருவிழாக்களின்போது வருகிறார்கள். ஏனெனில், அது அவர்களின் வேர்களுடன் தொடர்பை அளிக்கிறது” என்று கூறுகிறது.

கடலோர கர்நாடகாவில், கம்பாலா (மாடுகளை ஓட்டிச்செல்லும் பந்தயம்), யக்ஷகானா (நடன அரங்கம்) அல்லது பயலாட்டா (திறந்தவெளி அரங்கம்) போன்ற உள்ளூர் கலாச்சாரத்தின் சாராம்சம் மற்றும் பிற உள்ளூர் கலாச்சார சுவைகள் இந்த கோயில் திருவிழாக்களில் இடம்பெறுகின்றன. பழைய மைசூர் பகுதியில், பல நாட்டுப்புறக் கலைகள் காணப்படுகின்றன. அதே நேரத்தில் ஹைதராபாத்-கர்நாடகா மற்றும் மும்பை-கர்நாடகா பகுதிகளில் இது தூய்மையான, நாடகம், வணிகம் மற்றும் பொழுதுபோக்கு வடிவமாக உள்ளது.

சமீபத்திய கர்நாடக மாநில சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, ​​சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி, சட்டமன்ற உறுப்பினர்களை தனது கிராமத்தில் நடக்கும் கோயில் திருவிழாவிற்கு அழைத்தார். அன்று இரவு தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக அவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் அமர்வை முடிக்க முயன்றார். 73 வயதான முன்னாள் முதல்வர் சித்தராமையா கடந்த வாரம் தனது சொந்த ஊருக்கு சென்று நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியின் நாட்டுப்புற நடனமான வீர மக்கலா குனிதா நடனத்தை ஆடினார்.

கோயில் திருவிழாக்கள் எப்போது, ஏன் நடத்தப்படுகின்றன?

உள்ளூர் திருவிழாக்கள் கிராமப்புற பகுதிகளில் விவசாயப் பொருளாதாரத்தின் விளைவாக இருக்கிறது. திருவிழாக்கள் பொதுவாக நவம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் நடைபெறும். ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, விவசாயிகள் இந்த நேரத்தில் விவசாய நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்கிறார்கள். ஏனெனில், கடைசி மற்றும் அடுத்த பயிர் பருவங்களுக்கு இடையில் இடைவெளி உள்ளது. ஹம்பி கன்னடப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி ஆய்வுகள் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் எம்.சந்திர பூஜாரி கூறுகையில், “இன்றைய நகர்ப்புற வகுப்பினர் மதச் செயல்பாடுகளைத் தவிர, சுற்றுலா அல்லது வணிக வளாகம் அல்லது பொழுதுபோக்கு பூங்காவிற்குச் செல்வதன் மூலம் ஓய்வெடுக்கிறார்கள். பண்டைய நாட்களில் இந்த திருவிழாக்கள் கிராமவாசிகளுக்கு பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுக்கான இடங்களாக இருந்தன.” என்று கூறுகிறார்.

இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான கிராம திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில் அனைத்து மதங்களையும் சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்கின்றனர். உதாரணமாக, கடலோர கர்நாடகாவில் உள்ள பாப்பாநாடு ஸ்ரீ துர்காபரமேஸ்வரி கோயில் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ துர்காபரமேஸ்வரி கோயில் முஸ்லீம்களின் பங்களிப்புடன் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஒரு முஸ்லீம் வணிகரான பாப்பா, ஜெயின் ஆட்சியாளரான முல்கி சவந்தாவுக்கு ஒரு கோயில் கட்ட உதவுமாறு தெய்வீகக் குரல் கேட்டதாக உள்ளூர் நம்பிக்கை உள்ளது. பாப்பாநாடு கோயில் திருவிழாவை பல தலைமுறைகளாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு, கோயில் திருவிழாக்களில் முஸ்லிம்களை தடை செய்ய வேண்டும் என்ற வலதுசாரி குழுக்களின் அழைப்பின் காரணமாக, கோயில் திருவிழாவில் இருந்து முஸ்லிம் வியாபாரிகள் ஒதுங்கி இருந்தனர் – கோயில் அதிகாரிகள் பங்கேற்பதையும் மீறி இது நடந்தது.

மற்ற இடங்களில் சட்டம் ஒழுங்கு கவலைகள் மற்றும் இந்துத்துவா ஆதரவு குழுக்களின் பிரச்சாரம் இருந்தபோதிலும், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் கூட்டாக கோவில் திருவிழாக்களில் கலந்து கொண்டனர். பிதார் மாவட்டத்தில் உள்ள அஷ்டூர் கிராமத்தில், ஹஸ்ரத் சுல்தான் அகமது ஷா வாலியின் கல்லறைக்கும், அல்லாமா பிரபுவுக்கும் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாகக் கொண்டாடும் திருவிழாவின்போது வழிபாடு செய்யப்படுகிறது.

கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த சுல்லியாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை ஷைலி பிரபாகர், சிறுவயதில் ஸ்ரீ சென்னகேசவா கோயில் திருவிழாவை ரசித்ததாகக் கூறினார்.

ஜனவரி மாதம் நடைபெறும் ஸ்ரீ சென்னகேசவா கோயில் திருவிழா லட்சக்கணக்கான மக்களை ஈர்க்கும். “அப்போது எங்கள் ஊரில் வளையல்களோ மற்ற பொருட்களையோ வாங்க அவ்வளவு கடைகள் இல்லை. நாங்கள் பணத்தைச் சேமித்து, திருவிழாவுக்காக காத்திருந்தோம். நாங்கள் அவற்றை வாங்கினோம். இதில் எந்த சமூகத்தையும் அல்லது மதத்தினரையும் தடை செய்யவில்லை. பொருட்கள் வாங்குவதும், கோயில் திருவிழாவில் பங்கேற்பதும் எங்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. திருவிழாவின்போது நீங்கள் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் இப்பகுதியின் நாட்டுப்புறக் கதைகளைக் காண முடியும்” என்று ஷைலி பிரபாகர் கூறினார்.

திருவிழாக்கள் ஏன் வகுப்புவாதமாக மாறியது?

ஹிஜாப் சர்ச்சையைத் தொடர்ந்து, அரசுக் கல்லூரிகளில் பெண்கள் முக்காடு அணிவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய மாநில அரசு விதித்த தடை செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, முஸ்லிம்கள் ஒரு நாள் வணிக நிறுவனங்களை தானாக முன்வந்து மூடி போராட்டம் நடத்தினர். இதற்கு கடலோர கர்நாடகாவில் உள்ள வலதுசாரி இந்து அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. கோவில் திருவிழாக்களில் கடைகளும் வியாபாரங்களும் உள்ளன. முஸ்லிம் வியாபாரிக்ளை தடை செய்ய கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை சட்டம், 2002-ன் விதி 12ஐ அவர்கள் மேற்கோள் காட்டினர். அந்த விதி கூறுவதாவது: “இந்த வளாகத்திற்கு அருகில் உள்ள நிலம், கட்டிடம் அல்லது தளங்கள் உட்பட எந்த சொத்தும் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு குத்தகைக்கு விடப்படாது.” என்று கூறுகிறது.

சில பாஜக மற்றும் சங்பரிவார் தலைவர்களின் கருத்துப்படி, 2021 அக்டோபரில் முஸ்லிம் வியாபாரிகளை புறக்கணிக்கும் நடவடிக்கையைத் தொடங்கியது. கடலோர கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தின் குந்தபுரா பகுதியில் உள்ள கங்கொல்லியில் பல முஸ்லிம்கள், சட்டவிரோத பசுவதைக்கு எதிரான ஊர்வலத்தில் கலந்து கொண்ட மீன் வியாபாரிகள் மற்றும் மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக இந்து வியாபாரிகளிடம் இருந்து மீன் வாங்குவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது இந்த பொருளாதார தடைக்கு பாஜகவின் தேசிய செயலாளர் சி.டி. ரவி உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருவிழாக்களின் தற்போதைய நிலை என்ன?

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் பெரும்பாலான வருடாந்திர கண்காட்சிகள் பெரும் கூட்டத்தை ஈர்த்துள்ளன. நூற்றுக்கணக்கான கண்காட்சிகள் நடைபெற்ற மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் முஸ்லிம் விற்பனையாளர்களின் புறக்கணிப்பு தொடங்கியது. இந்த பிரச்சாரம் தற்போது கர்நாடகாவின் மற்ற பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. சில இடங்களில், வலதுசாரி குழுக்களின் கோரிக்கைகளை கோவில் கமிட்டிகள் ஏற்கின்றன, சில இடங்களில் அவை நிராகரிக்கப்படுகின்றன. பெங்களூருவின் புறநகரில் உள்ள நெலமங்களாவில், கோயில் கமிட்டியினர் கோயில் கண்காட்சிகளில் முஸ்லிம் கடைக்காரர்களை அனுமதித்தனர். வலதுசாரி குழுக்கள் உள்ளூர் செல்வாக்கை அனுபவிக்கும் மாநிலத்தின் வகுப்புவாத உணர்திறன் கொண்ட கடலோரப் பகுதிகளில், கோயில் கமிட்டிகள் கோயில் திருவிழாக்களில் முஸ்லிம் கடைக்காரர்களைத் தடுக்கின்றன.

கோயில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

கோயில் திருவிழாக்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் வியாபாரம் செய்வதைத் தடுக்கும் விதி 2002-ம் ஆண்டு எஸ்.எம். கிருஷ்ணா தலைமையிலான காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது என்று கர்நாடகாவில் உள்ள பாஜக அரசு கூறியுள்ளது. இருப்பினும், கோயில் திருவிழாக்களில் இஸ்லாமியர்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு இரண்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். “இதெல்லாம் பைத்தியக்காரத்தனம். எந்த கடவுளும் அல்லது மதமும் இதுபோன்ற விஷயங்களைப் போதிக்கவில்லை” என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஹெச் விஸ்வநாத் கூறினார். மதச்சார்பற்ற ஜனதா கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமி, மாநில அரசை கடுமையாக சாடியதோடு, “முதல்வர் பசவராஜ் பொம்மை இந்து வலதுசாரி குழுக்களின் கைப்பொம்மை” என்று கூறினார்.

பயோகான் லிமிடெட் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார் ஷாவும் தனது கவலையை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். “கர்நாடகம் எப்போதுமே அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்கியுள்ளது. மேலும் இதுபோன்ற வகுப்புவாத விலக்குதலை நாம் அனுமதிக்கக் கூடாது- தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொழில்நுட்பம் வகுப்புவாதமாக மாறினால் அது நமது உலகளாவிய தலைமையை அழித்துவிடும்” என்று கிரண் மஜும்தார் ஷா ட்வீட் செய்துள்ளார். வளர்ந்து வரும் மதப் பிளவைத் தீர்க்க வேண்டும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை அவர் கேட்டுக் கொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.