தஞ்சை விபத்து; மோடி வேதனை: பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உதவி அறிவிப்பு

PM Modi condolences on Thanjavur chariot accident: தஞ்சாவூர் தேர் விபத்து சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகக் கூறியுள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜையின் 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதனையொட்டி தேர் பவனி களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது. தேரினை மக்கள் வடம் பிடித்து வந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில், அப்பகுதியில் மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 4 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இதையும் படியுங்கள்: இனி இதுபோல் துயரம் நடக்கக் கூடாது: தலைவர்கள் அனுதாபம்

இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தின் தஞ்சாவூரில் நடந்த அசம்பாவிதம் மிகுந்த வேதனை அளிக்கிறது. துக்கத்தின் இந்த நேரத்தில் என் எண்ணங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என பதிவிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.