தமிழத்தில் பெட்ரோல் ரூ.2-ம், டீசல் ரூ.4-ம் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு பறந்த பரபரப்பு அறிக்கை.!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், அவற்றின் மீதான வாட் வரியை திமுக அரசு குறைத்து தமிழக மக்கள் நலன் காக்க வேண்டும் என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உலக அளவில் பணவீக்கம் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழ்நிலையில், விஷம் போல் விலைவாசி உயர்ந்து வருகின்ற இந்தத் தருணத்தில், ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதுகாக்கும் பொருட்டு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் மீதான வரியை கலால் வரியை லிட்டருக்கு ரூ.6-ம் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல், உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிவாயு இணைப்புகளுக்கு, ஆண்டுக்கு 12 உருளைகளுக்கு தலா ரூ.200 மானியம், பிளாஸ்டிக், நிலக்கரி, இரும்பு மற்றும் உருக்கு மீதான வரி குறைப்பு, கூடுதல் உர மானியம், சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை என பல்வேறு அதிரடி அறவிப்புகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புகளை அதிமுக சார்பில் வரவேற்கிறேன்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம், ஒவ்வொரு மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரிக்கேற்ப, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன்மூலம், அத்தியாவசியப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள், கட்டுமானப் பொருள்கள் ஆகியவற்றின் விலைகள் இறங்கவும், ஆட்டோ, டாக்சி போன்ற வாகனங்களுக்கான கட்டணங்கள் குறையவும் வழி வகுக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், பணவீக்கம் குறையவும் வாய்ப்பு ஏற்படும். 

மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கேரளம், ராஜஸ்தான் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதனா மதிப்புக்கூட்டு வரியை குறைத்துள்ளன. 

தமிக தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில், பெட்ரோல், மீதான வரியை லிட்டருக்கு மேலும் இரண்டு ரூபாயும், டீசல் மீதான வரியை நான்கு ரூபாயும் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. 

இவ்வாறு குறைக்கப்படுவதன் மூலம் தற்போது ரூ.110.85 ஆக விற்பனை செய்யப்படும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.11.50 காசுகள் குறைந்து ரூ.100க்கு கீழ் அதாவது ரூ.99.35 ஆக விற்பனை செய்யும் நிலை உருவாகும். இதேபோன்று, லிட்டருக்கு ரூ.100.94 ஆக விற்பனை செய்யப்படும் டீசல் விலை ரூ.11 குறைந்து ரூ.89.94 ஆக விற்பனை செய்யப்படும் நிலை உருவாகும். 
இது, பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் செல்வோர் செலுத்தும் வாகனக் கட்டணங்கள் மேலும் குறையும், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பு வெகுவாகக் குறையவும், அரசுப் பேருந்துக் கட்டணங்கள் உயரப் போகிறது எனற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வழிவகுக்கும்.

ஏற்கனவே, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக தக்காளி, பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலையும் ஒரு கிலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்படும் தருணத்தில், ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலன்களைக் காக்கும் பொருட்டு தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. 

எனவே, முதல்வர், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், பணவீக்கத்தைக் குறைக்கும் வகையிலும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இழப்பீட்டைக் குறைக்கும் வகையிலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், குறைந்தபட்சம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2-ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4-ம் குறைக்க நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதுவும் திராவிட மாடல் போலும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும்”

இவ்வாறு அந்த அறிக்கையில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.