ரங்கநாதர் கோயிலில் தாயார் திருவடி சேவை

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 26ம் தேதி தொடங்கி வருகிற 4ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி ஸ்ரீரங்கம் கோயில் தாயார் சன்னதியில் தினமும் மாலை தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பெருமாள் கோயில்களில் பெருமாள் மற்றும் தாயாரின் திருவடிகளை தரிசனம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. மேலும் ஸ்ரீரங்கம் கோயில் ரங்கநாச்சியார் படி தாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும்.

ஆனால் நவராத்திரி உற்சவத்தின் 7ம் திருநாள் மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். அதன்படி இந்த ஆண்டுக்கான ரங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதையொட்டி ரங்கநாச்சியார் மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைந்தார்.  இரவு 7.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.30 மணிக்கு முடிவடைந்தது. அங்கிருந்து இரவு 10.30 மணிக்கு ரங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
 
திருவடி சேவையையொட்டி தாயார் சாய்கொண்டை, வைரபதக்கம், பவளமாலை, கிளி மாலை, கையில் தங்கக்கிளி, காலில் தங்கக்கொலுசு அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாயாரின் திருவடிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தாயார் திருவடியை தரிசனம் செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.