மும்பை: தீ விபத்து சம்பவங்களை தொடர்ந்து, எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யவதற்கான இடத்தில், பிற வாகனங்களை நிறுத்தக்கூடாது என மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் இவை இடம்பெற்றுள்ளன. எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் ஆங்காங்கு நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, எலக்ட்ரிக் வாகனங்கள் என்றாலே ஒரு வித அச்சம் மக்களிடையே ஏற்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவில் சமீபத்திய நிகழ்வாக, பால்கரில் உள்ள வசாய் பகுதியில், சார்ஜ் போட்டு வைத்திருந்தபோது பேட்டரி வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில், சபீர் அன்சாரி என்ற 7 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். கடந்த செப்டம்பர் 23ம் தேதி சிறுவன் தூங்கிக் கொண்டிருந்தபோது, அந்த அறையில் சார்ஜ் போட்டு வைத்திருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் தீக்காயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான். இதையடுத்து, இழப்பீடு கோரி அவனது தந்தை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கிடையே, தொடரும் எலக்ட்ரிக் வாகன தீ விபத்து சம்பவங்களை அடுத்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,
* குடியிருப்புகள், மால்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட பிரத்யேக பகுதியில், பிற வாகனங்கள் எதையும் நிறுத்தக்கூடாது. இதுபோல், பொது வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யக்கூடாது.
* எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எலக்ட்ரிக் சைக்கிள் போன்ற, பேட்டரியை கழற்சி எடுத்துச் செல்லும் வசதி கொண்டவற்றில், வீட்டு உபயோகத்துக்கான 15 ஆம்ஸ் 3 பின் சாக்கெட்டில் சார்ஜ் செய்வது கூடாது.
* சம்பந்தப்பட்ட வாகன தயாரிப்பாளர்கள் பரிந்துரைக்கும் பிரத்யேக சார்ஜ் அமைப்புகளின் மூலம்தான் சார்ஜ் செய்ய வேண்டும். இவற்றை நிறுவுவது தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
* சில இடங்களில் பன்னடுக்கு பார்க்கிங் வசதிகள் உள்ளன. இதுபோன்ற இடங்களில், மேலே கூரை இல்லாத, காற்றோட்டம் உள்ள பகுதிகளில் சார்ஜ் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தலாம். இது, தீ விபத்து ஏற்பட்டால் கூட பாதிப்பை குறைக்க உதவும். வேறு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்படலாம்.
* அனைத்து விதமான எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் பாயின்ட்களுக்கு, தரையில் இருந்து குறைந்த பட்சம் 800 மி.மீ உயரத்தில்தான் சாக்கெட் அமைத்து இணைப்பு கொடுத்திருக்க வேண்டும்.
* குழந்தைகள் விளையாடும் பகுதிகளில், வாகன சார்ஜிங் செய்வதற்கான சாக்கெட்களை அமைப்பதை தவிர்த்து, பிற இடங்களில் அமைப்பது நல்லது.
* தற்போது மகாராஷ்டிராவில் ஏறக்குறைய 1.5 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் உள்ளன. இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, மின்சாரம் மூலமான தீ விபத்தை தடுப்பதற்கு அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களில் ஏற்படுத்த வேண்டும்.
* எலக்ட்ரிக் வாகன சார்ஜ் வசதிகள், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் இருந்து 10 மீட்டருக்கு அப்பாலும், டிரான்ஸ்பார் மற்றும் பெட்ரோலியம் டேங்க், விற்பனை நிலையங்களில் இருந்து 15 மீட்டருக்கு அப்பாலும் நிறுவ வேண்டும். இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மின்சார வாகனங்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்த போதிலும், முதன் முதலாக இந்த சம்பவங்களை தடுப்பதற்கான நெறிமுறைகளை மகாராஷ்டிர அரசுதான் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.