“170-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்துள்ள நிலையிலும்…" – முதல்வரை சாடிய ஓ.பி.எஸ்

பகுதி நேர ஆசிரியர்களின் பணியை உறுதிசெய்யக் கோரி ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை பக்கம் 83 வரிசை எண் 311-ல், `ரூபாய் 8000 அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களின், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அ.தி.மு.க ஆட்சியில் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அத்தகைய 20 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று கழக ஆட்சி அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலம் வரை ஊதியம் வழங்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்களாகியும் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க அரசு முன்வராத நிலையில், இதனை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டாலும், ஓர் அறிக்கையாவது வெளியிட வேண்டும் என்பதே பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்கு கூட செவி மடுக்க தி.மு.க அரசு தயாராக இல்லை. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், 2009-ம் ஆண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்பட்டது.

ஸ்டாலின்

இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட போது பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதத்தை பொறுத்தவரையில் 1-6-2009-க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓர் ஊதிய விகிதத்தையும், 1-6-2009-அன்று மற்றும் அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓர் ஊதிய விகிதத்தை அப்போதிருந்த திமுக அரசு நிர்ணயம் செய்தது. திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட இந்த இரட்டை நிலைப்பாடுதான் தற்போதைய ஊதிய வித்தியாசத்திற்கு காரணம். இதற்கு மூல காரணமே தி.மு.க தான் என்பதை மறைத்து, அனைத்தையும் அ.தி.மு.க ஆட்சியில் ஏற்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை திமுக தனது அறிக்கையில் உருவாக்கியுள்ளது.

பன்னீர்செல்வம்

ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் திமுக செய்யும் என்பதை திமுக அரசின் நடவடிக்கைகளில் இருந்து எளிதில் அறிந்து கொள்ளலாம். 2018-ம் ஆண்டு பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய போது, அதற்கு ஆதரவு தெரிவித்ததுடன் இதற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். இப்போது அவரே முதலமைச்சராக பொறுப்பேற்று 20 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவர்களுடைய நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதில் என்ன தயக்கம்? திமுகவுடைய இரட்டை நிலைப்பாட்டால் 2009-ம் ஆண்டு 3000 ரூபாய் அளவுக்கு இருந்த ஊதிய முரண்பாடு தற்போது 20 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சென்று இருக்கிறது.

திமுகவால் ஏற்பட்ட முரண்பாட்டை களைய ஆட்சிக்கு வந்த உடனே திமுக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. இப்போது பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், 170-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்துள்ள நிலையிலும் கூட, ஊதிய முரண்பாட்டை களைவதற்கான ஆணையையோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் அதை களைவதற்கான ஒரு அறிவிப்பை கூட முதலமைச்சர் வெளியிடாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பகுதி நேர ஆசிரியர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் அரசுக்கு 400 கோடி ரூபாய் அளவுக்கு தான் கூடுதல் செலவு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

பன்னீர் செல்வம்

2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும் தமிழ்நாடு அரசுக்கு, இது ஒன்றும் பெரிய தொகை அல்ல. லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பாததன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு அரசால் வருவாய் மிச்சப்படுத்தப்பட்டு இருக்கின்ற நிலையில், பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றுவதில் அரசுக்கு பெரிய சிரமம் இருக்காது. இந்திய அரசமைப்பு சட்டத்திலேயே சமவேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதன் அடிப்படையில் முந்தைய திமுக அரசால் ஏற்படுத்தப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டினை களையும் வகையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.