துப்பாக்கியால் சுடப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் உயிரிழப்பு

ஒடிசாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் இன்று துப்பாக்கியால் சுடப்பட்டார். ஜார்சுகுடா மாவட்டத்தில் ஒரு கூட்டத்திற்காக சென்றுகொண்டிருந்தார். பிரஜ்ராஜ்நகர் பகுதியில் சென்றபோது உதவி காவல் துணை ஆய்வாளர் (ASI) கோபால் தாஸ் என்பவர் திடீரென அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். 

இந்த தாக்குதல் சம்பவம் மதியம் 1 மணியளவில் நடைபெற்றது. அமைச்சர் காரில் இருந்த இறங்கிய நேரத்தில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதனால், அமைச்சரின் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார். மார்பு பகுதியில் இரண்டு குண்டுகள் பாய்ந்ததில் அவர் உடனடியாக மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உரிய சிகிச்சை கொடுக்கப்பட்டபோதும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதனால் சிகிச்சை பலனின்றி சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் உயிரிழந்தார்.  

இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளர் குப்தேஸ்வர் போய் கூறுகையில்,”உதவி காவல் துணை ஆய்வாளர் (ASI) கோபால் தாஸ், அமைச்சரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அமைச்சர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணத்தை நாங்கள் கண்டறிய முயற்சிக்கிறோம். காவலர் தாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.  முதற்கட்ட தகவலின்படி, காவலர் கோபால் தாஸ் தன்னிடம் இருந்த ரிவால்வரை வைத்து அமைச்சர் நபா கிஷார் தாஸை சுட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த தாக்குதலுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கண்டனம் தெரிவித்தார். 

முதலமைச்சர் இரங்கல்

இந்நிலையில் அமைச்சர் நபா கிஷோர் தாஸ் உயிரிழப்புக்கு ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் இறப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள அவர், இது துருதிஷ்டவசமான சம்பவம் என்றும் கூறியுள்ளார். அவரின் மறைவு ஒடிசா மாநிலத்துக்கும், அரசுக்கும் பேரிழப்பு என தெரிவித்துள்ளார்.  நபா கிஷோர் தாஸின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.