கும்பகோணம்: 'காங்கிரஸ் மேயர் பதவிக்குச் சிக்கலா?'- நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக திட்டம்?

திமுக, காங்கிரஸ் இரு கட்சியும் கடந்த சுமார் 20 ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்து வந்தது. நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் கூட்டணியாகப் போட்டியிட்டனர்.

அதன்படி கும்பகோணம் மாநகராட்சியில் கவுன்சிலர்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டதில் இரு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் மட்டும் வெற்றி பெற்றனர். இதில் ஆட்டோ டிரைவராக இருந்த சரவணனும் ஒருவர்.

கும்பகோணம் மேயர் சரவணன்
கும்பகோணம் மேயர் சரவணன்

கூட்டணி தர்மப்படி கும்பகோணம் மேயர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட சரவணன் மேயர் ஆனார். தற்போது துணை மேயராக இருக்கும் தமிழழகன் மேயர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது நிகழ்ந்தது. அந்தச் சமயத்தில் இந்த விவவாகரம் பேசு பொருளாகவும் அமைந்தது.

இந்நிலையில் சில காரணங்களால் மாமன்ற கூட்டங்களில் தி.மு.க கவுன்சிலர்களுக்கும் மேயர் சரவணனுக்கும் இடையே வாக்கு வாதம் மற்றும் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் தன்னைத் தாக்கி விட்டதாக மேயர் சரவணன் நெஞ்சு வலிப்பதாகக் கூறி தரையில் உருண்டு புரண்டதும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் நடந்தன.

மேயர் சரவணனின் செயல்பாடு சரியில்லாத நிலையில் துணை மேயர் தமிழ் மற்றும் கவுன்சிலர்கள் சங்கடப்படுவதை அறிந்த ஸ்டாலின், கூட்டணியில் இருப்பதால் அவர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும் எனச் சொல்லி திமுக-வினரைச் சமாதானம் செய்துள்ளார்.

கும்பகோணம் மேயரை காங்கிரஸுக்குக் கொடுத்த பிறகு ஸ்டாலினைச் சந்தித்திருக்கிறார் தமிழ். அப்போது, என்ன தமிழ் என் மேல் கோபமானு ஸ்டாலின் கைகளைப் பற்றி கொண்டு கேட்டதில் தலைவரே, எனக்கு பதவி முக்கியமில்லை நீங்கள் தான் என நெகிழ்ந்திருக்கிறார் துணை மேயர் தமிழ்.

மேயர் சரவணன் மற்றும் துணை மேயர் தமிழழகன்
மேயர் சரவணன் மற்றும் துணை மேயர் தமிழழகன்

இப்படியான சூழலில் காங்கிரஸ் மேயர் சரவணனுக்கும், திமுக துணை மேயர் தமிழ் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்களுக்கும் தொடர்ந்து ஏழாம் பொருத்தமாக இருந்து வந்த நிலையில் கூட்டணி தர்மத்திற்காக தலைமைக்குக் கட்டுப்பட்டு சகித்து கொண்டிருப்பதாக வெளிப்படையாகவே திமுகவினர் பேசி வந்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி விஜய் முதல்வராவதற்கு ஆதரவளித்து தவெக கூட்டணிக்குச் சென்று விட்டது. இதனை காங்கிரஸ் முதுகில் குத்தி விட்டதாக திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதையடுத்து திமுக தயவில் மேயராக இருக்கும் சரவணனுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக கவுன்சிலர்கள், மாமன்ற கூட்டத்தைக் கூட்டி நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றி வாக்கெடுப்பு நடத்தி சரவணனை மேயர் பதவியிலிருந்து இறக்க முடிவெடுத்திருப்பதாகப் பரவலாகப் பேசப்படுவது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

இது குறித்து திமுக-வைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம், காங்கிரஸ் தவெக-வுக்கு ஆதரவு கொடுத்து கூட்டணிக்குச் சென்று விட்டது. எங்கள் ஆதரவுடன் சரவணன் மேயர் பதவியில் தொடர்வதை எங்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

கும்பகோணம் மாநகராட்சி
கும்பகோணம் மாநகராட்சி

இதனால் ஆணையரிடம் கவுன்சில் கூட்டத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு கடிதம் கொடுக்கும் முடிவில் இருக்கிறோம். எதுவாக இருந்தாலும் எங்கள் தலைமை உத்தரவைப் பெற்றபிறகே செய்வோம். தன்னிச்சயாக எதுவும் செய்யமாட்டோம் என்கிறார்கள்.

மற்றொரு தரப்பினரோ, இன்னும் எட்டு மாதம்தான் மேயர் பதவிக்கான ஆயுள். இப்போது நம்பிக்கை வாக்குகெடுப்பு உள்ளிட்ட மூவ்களை எடுத்தால் சில சட்ட சிக்கல்களும் வரும். எதுவாக இருந்தாலும் தலைமை சொல்வதற்கேற்ப கலந்து பேசி முடிவெடுத்து செயல்படுவோம் என்றும் சொல்கிறார்கள். இதனால் கும்பகோணம் அரசியல் வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.