“இந்தியாவும் சீனாவும் நட்புடன் இருக்க வேண்டும்" – ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் வேண்டுகோள்

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு, கடந்த ஆண்டு இறுதியில் சுழற்சிமுறையில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த புதன், வியாழக் கிழமைகளில் டெல்லியில் ஜி20 கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்ததற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “நிதி மற்றும் குறு பொருளாதாரம் சார்ந்த ஆலோசனைகளை மேற்கொண்டு, அது சார்ந்த வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக அமைக்கப்பட்டதுதான் ஜி 20 கூட்டமைப்பு.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்

ஆனால், டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் உக்ரைன் விவகாரத்தைத் தவிர வேறு எதுவும் பேசப்படவில்லை என்பது வெட்கக்கேடானது. நேட்டோ அமைப்பை விரிவுபடுத்துவது மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான போருக்குத் தயாராகும் வகையில், உக்ரைனுக்குள் ஆயுதங்களை குவித்துவந்தது தொடர்பாக, மேற்கத்திய நாடுகளுக்குப் பல ஆண்டுகளாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துவந்தது. போதுமான எச்சரிக்கைகளுக்குப் பிறகும் மேற்கத்திய நாடுகள் தங்களின் செயல்பாடுகளை நிறுத்தாததால்தான் இந்த நடவடிக்கையை எடுக்கவேண்டிய கட்டாயம் ரஷ்யாவுக்கு ஏற்பட்டது.

இந்த நடவடிக்கையால் ஐரோப்பிய நாடுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்தச் சண்டையில் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபரும், நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளரும் வெளிப்படையாகக் கூறிவருகின்றனர். மேற்கத்திய நாடுகளே உலகை மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது. செர்பியா மீது நேட்டோ அமைப்பினர் குண்டுத் தாக்குதல் நடத்தியது இவர்களுக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்

அமெரிக்க செனட் உறுப்பினராக அதிபர் ஜோ பைடன் இருந்தபோதுதான் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோலத்தான் இராக் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு அதைத் தவறு என்று பிரிட்டனின் முன்னாள் பிரதமர் அறிவித்தார். பிற நாடுகளுக்கு அச்சுறுத்தல், எச்சரிக்கைவிடும் உரிமை அமெரிக்காவுக்கு மட்டுமே இருக்கிறது என்ற எண்ணம் நிலவுகிறது. இதை யாரும் கேள்வி கேட்பதும் இல்லை. சீனா, இந்தியா என்ற இரண்டு பெரிய நாடுகளும் நண்பர்களாக மாறுவதைப் பார்க்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ரஷ்யாவின் எரிசக்திக் கொள்கை, இந்தியா, சீனா போன்ற நம்பகமான பங்காளிகளை நோக்கியதாக இருக்கும்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில், `ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின்கீழ் பேச்சுவார்த்தை நடத்துவது கிரிமினல் குற்றம்’ என்ற ஆணையில் கையெழுத்திட்ட பிறகும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தத் தயாரா என்று எல்லோரும் ரஷ்யாவிடம்தான் கேட்கிறார்கள். இது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.