மரணத்திலும் இணைப்பிரியா நட்பு.. இறந்த நண்பனுடன் உடன்கட்டை ஏறிய இளைஞர்.. கதறி துடித்து உயிரிழந்த பரிதாபம்!

லக்னோ:
நண்பன் உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் அவரை எரியூட்டும் மேடையிலேயே விழுந்து தனது உயிரை நீத்திருக்கிறார் இளைஞர் ஒருவர். என்ன நடந்தது?

உத்தபிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக் குமார் லோதி (44). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கெளரவ் ராஜ்புட் (42) என்பவரும் பால்ய கால நண்பர்கள். இருவருமே சிறு வயது முதலே பள்ளியிலும், கல்லூரியிலும் ஒரே வகுப்பில் இவர்கள் பயின்றுள்ளனர். எப்போதுமே இருவரும் ஒன்றாகதான் இருப்பார்களாம். அந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.

திருமணத்தில் கூட தாங்கள் பிரிந்து விடக்கூடாது என்பதற்காக ஒரே நாளில்தான் இருவரின் திருமணமும் நடந்திருக்கிறது. அதன் பிறகும், குடும்பமாக பரஸ்பரம் வீடுகளுக்கு சென்று வருவதையும் இவர்கள் வழக்கமாக்கி உள்ளார். இருவருக்குமே குழந்தைகளும் உள்ளன.

இந்த சூழலில், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அசோக் குமாருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. பின்னர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில் அவருக்கு உணவுக் குழாயில் புற்றுநோய் வந்திருப்பது தெரியவந்தது. இதை அறிந்ததும் அவரது நண்பர் கெளரவ் மிகுந்த மன வருத்தம் அடைந்துள்ளார். அவருக்கான மருத்துவ செலவுகளையும் அவரே செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நோய் முற்றிப் போகவே சிகிச்சை பலனில்லாமல் அசோக் குமார் கடந்த சனிக்கிழமை காலை உயிரிழந்தார். நண்பனின் பிரிவை தாங்க முடியாமல் அவரது நண்பர் கெளரவ் கதறி அழுதார். அவரது இறுதிச்சடங்குகளை முன்னின்று நடத்தி வைத்தார். அதன் பிறகு, அங்குள்ள யமுனை நதிக்கரையில் அன்று மாலை அசோக் குமாரின் உடலுக்கு எரியூட்டப்பட்டது.

உடல் எரியூட்டப்பட்டதற்கு பின்னர் அங்கிருந்து அனைவரும் கலைந்து செல்ல தொடங்கினர். அப்போது கெளரவ் மட்டும் அங்கேயே நின்றபடி இருந்தார். பின்னர் திடீரென ஓடிச்சென்று அசோக் குமார் உடல் எரிந்து வரும் குழியில் பாய்ந்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அங்கிருந்தவர்கள், உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து கெளரவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனில்லாமல் கெளரவ் உயிரிழந்தார். அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.