”திரும்பிய பக்கமெல்லாம் ரத்தம், சடலங்கள், உடல் பாகங்கள்” – ஒடிசா ரயில் விபத்தில் உயிர் பிழைத்தவரின் வேதனை சாட்சி

புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்து தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரயில் விபத்து நடந்த இடம் தொடர்பான புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பதாக உள்ளன. இந்நிலையில் விபத்தில் தப்பிய நபர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விபத்து குறித்த வேதனை சாட்சியைப் பகிர்ந்துள்ளார்.

அனுபவ் தாஸ் என்ற அந்தப் பயணி ஹவுராவில் இருந்து சென்னைக்கு பயணித்துக் கொண்டிருந்தார். விபத்தில் அவர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துவிட அது பற்றி அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் நான் பயணித்தேன். விபத்தில் நான் உயிர் பிழைத்திருப்பதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது நிச்சயமாக மிகப் பெரிய ரயில் விபத்து.
பெங்களூரு – ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டிகள் மூன்று முற்றிலுமாக தடம்புரண்டு சேதமடைந்துள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இவற்றில் ஏசி 3 டயர், ஏசி 2 டயர், ஸ்லீப்பர், பொதுப் பெட்டிகள் அடங்கும்.

இந்த விபத்தில் மூன்று ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12841), யஷ்வந்த்பூர் – ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் ரயில் மற்றுமொரு சரக்கு ரயில் பாதிக்கப்பட்டுள்ளன. எனக்குத் தெரிந்து முதலில் கோரமண்டல் ரயில் தடம் புரண்டு அருகில் லூப் தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. பின்னர் தடம்புரண்ட ரயில் பெட்டிகள் அடுத்த தண்டவாளத்தில் இருந்த யஷ்வந்த்பூர் ரயில் மீது மோதியுள்ளது.

நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நான் என் கண்களால் 200 முதல் 250 சடலங்களை இதுவரை பார்த்துவிட்டேன். ரயில் பெட்டிகளுக்குக் கீழ் சிதைந்து கிடந்த குடும்பங்கள், உடல் அங்கங்கள் துண்டான சடலங்கள், தண்டவாளம் முழுவதும் ரத்தம் என நான் கண்ட காட்சிகள் என் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாதவை என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.