மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு| 4 percent hike in dearness allowance for central government employees

புதுடில்லி, மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான, அகவிலைப்படியை, 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த, ஜூலை, 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு இது வழங்கப்பட உள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாள் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியுள்ளதாவது:

மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை, 4 சதவீதம் உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுஉள்ளது.

இதன்படி, 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 46 சதவீதமாக உயர்கிறது. இது, ஜூலை 1ம் தேதியில் இருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

இதன் வாயிலாக, 48.67 லட்சம் ஊழியர்கள் மற்றும் 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். இதனால், ஆண்டுக்கு, 12 ஆயிரத்து 857 கோடி ரூபாயை மத்திய அரசு கூடுதலாக செலவிட உள்ளது.

ரயில்வே, 2022 – 2023 நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. 650 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். மேலும், 1.50 லட்சம் கோடி கிலோ எடையுள்ள சரக்குகளை கையாண்டுள்ளது. இதையடுத்து, பணித் திறனுக்கேற்ப, 78 நாட்கள் போனஸ் வழங்கப்படும்.

‘கெசட்டட்’ அந்தஸ்தில் இல்லாத, 11.07 லட்சம் ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், ரயில்வேக்கு, 1,968 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.