நமக்குக் கவலை தரும் புள்ளிவிவரங்கள் அடிக்கடி வெளியாகும் நிலையில், சற்று மகிழ்ச்சி தரும் இரு புள்ளிவிவரங்கள் இப்போது வெளியாகி இருக்கின்றன.
முதலாவது, பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் (Employee Provident Fund- EPF) பணியாளர் சேர்க்கும் தொகையானது 2022-23-ம் நிதி ஆண்டில் 17% அளவுக்கு உயர்ந்து, ரூ.21.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2018-19-ம் ஆண்டில் இந்தத் திட்டத்தில் மக்கள் முதலீடு செய்திருந்தது ரூ.11.14 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. இந்தத் திட்டத்தில் மக்கள் முதலீடு செய்யும் தொகையானது நான்கே ஆண்டுகளில் ஏறக்குறைய இரு மடங்காக உயரும் நிலை உருவாகியுள்ளது.
இரண்டாவது, நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (National Pension System – NPS) என்கிற திட்டத்தில் சேர்ந்து ஓய்வுக்காலத்துக்கான நிதியை சேர்ப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்குக் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்கள் 12,349 பேரும், மாநில அரசு ஊழியர்கள் 35,253 பேரும் இந்தத் திட்டத்தில் சேர்ந்திருந்தனர். இதுவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்கள் 17,092 பேரும், மாநில அரசு ஊழியர்கள் 40,307 பேரும் எனப் புதிதாகச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இ.பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் (Voluntary Provident Fund) மூலம் சேர்க்கப்படும் தொகையானது நிதி ஆண்டில் ரூ.2.5 லட்சத்துக்கும் மேல் இருந்தால், அதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்கிற புதிய விதிமுறை கொண்டு வந்த பிறகும், இ.பி.எஃப் திட்டத்தில் மக்கள் அதிக அளவில் பணம் சேர்க்கக் காரணம், இதன் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம்தான். இதில் தற்போது ஆண்டுக்கு 8.15% வட்டி வருமானம் கிடைக்கிறது. பிற திட்டங்களுடன் ஒப்பிடும்போது இ.பி.எஃப் திட்டம் மூலம் கிடைக்கும் வருமானம் சற்று அதிகம்தான்.
அதே போல, என்.பி.எஸ் திட்டத்தின் மூலமும் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. இதில், கடந்த 10 ஆண்டுகளில் ஈக்விட்டி ஸ்கீம் மூலம் 13.61 சதவிகிதமும், கார்ப்பரேட் ஸ்கீம் மூலம் 8.92 சதவிகிதமும், அரசு கடன் பத்திரம் ஸ்கீம் மூலம் 8.99 சதவிகிதமும் வருமானம் கிடைத்துள்ளது. இந்த வருமானமானது பணவீக்கத்தைவிட அதிகம் என்பதை நாம் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.
நம் மக்கள் கடனுக்கு மேல் கடன் வாங்கி வருவது ஒருபக்கம் எனில், இப்படிப் பட்ட நல்ல திட்டங்களிலும் கணிசமான தொகையைச் சேர்த்து வருவதைக் கட்டாயம் பாராட்ட வேண்டும். காரணம், எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற சரியான முதலீட்டுக் கருவியைத்தான் மக்கள் தேர்வு செய்து வருகிறார்கள். இந்த இரு திட்டங்கள் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து, தங்களால் முடிந்த அளவுக்கு இவற்றில் சேர்ப்பதால் மட்டுமே ஓய்வுக் காலத்துக்குத் தேவையான நிதியைச் சேர்க்கும் புத்திசாலித்தனமான வழியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!
– ஆசிரியர்