Singapore Saloon: "இமான் அண்ணாச்சி சொன்னதுல உடன்பாடு இல்ல, அது ஜனநாயகம் கிடையாது !" – ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் கடந்த வாரம் வெளியாகியிருந்த திரைப்படம், ‘ சிங்கப்பூர் சலூன்’.

இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி, மீனாட்சி செளத்ரி, சத்யராஜ் எனப் பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் திரைப்படங்களைத் தொடர்ந்து வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் மூன்றாவது முறையாக ஆர்.ஜே. பாலாஜி இணைந்திருக்கிறார். இத்திரைப்படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த நிகழ்வில் பேசிய இமான் அண்ணாச்சி, “இந்தப் படத்துல என்னுடைய கதாபாத்திரத்தோட அளவு பெருசான்னு கேட்டேன். சின்ன கதாபாத்திரம்னுதான் இயக்குநர் சொன்னார். சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் உங்க படத்துல நான் நடிக்கணும்னு சொன்னேன். ஒரு படம் உருவாக என்னென்ன கஷ்டங்கள் இருக்கும்னு தெரியும். பத்திரிகைகளுக்கு ஒரு வேண்டுகோள். நிறைய நபர் விமர்சனத்தை போடுறாங்க. ஒரு படத்தை கஷ்டப்பட்டு பண்றாங்க. முதல்ல நிறைகளை சொல்லிட்டு கடைசியாக இந்த விஷயங்களையெல்லாம் இப்படி பண்ணினா நல்லா இருக்கும்னு சொல்லி முடிங்க.” எனப் பேசினார்.

Imman Annachi

இவரைத் தொடர்ந்து வந்து பேசிய சின்னி ஜெயந்த், ” ஆர்.ஜே. பாலாஜிக்கு இமான் அண்ணாச்சி ஒரு பட்டம் கொடுக்கிறதுக்கு நினைத்தாக சொன்னார். நான் ஒரு பட்டம் கொடுக்கிறேன். அவர் , ‘சவுத் இந்தியன் அமீர் கான்’. அவர் ஒவ்வொரு படங்களையும் வித்தியாசமாக பண்றார். நான் இந்தப் படத்தை விழுப்புரத்துல பார்த்தேன். நான் அங்க இருக்கிறவங்ககிட்ட இந்தப் படம் எப்படி இருக்குன்னு கேட்டேன். எல்.கே.ஜி படத்தோட ஹீரோ படம் ரொம்பவே நல்லா இருக்குன்னு சொன்னாங்க. அந்த அளவுக்கு பசங்க மனசுல அவர் இருக்கார்.” எனப் பேசி முடித்தார்.

இந்த விழாவில் பேசிய இயக்குநர் கோகுல், ” இந்தப் படத்துல் என் கனவு ரொம்ப பக்கத்துல வந்திருக்குனு ஒரு வசனம் வரும். இந்த படம் எனக்கு அப்படிதான். நேத்து சிகை அலங்கார சங்கத்தினர் 500 நபர்கள் இந்தப் படத்தை பாராட்டி ஒரு விழாவை ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. அப்போ அங்க ஒருத்தர், ‘இந்த, கத்தி பண்ணாத விஷயங்களை இந்தப் படத்தோட கதை பண்ணிருச்சு’னு சொன்னார். ஒரு படத்தோட நோக்கம் ரொம்பவே முக்கியம். இந்த படத்தை முடிக்கும் போது ‘ சிகை அலங்காரம் செய்பவர்களுக்கு சமர்பணம்’னுதான் சொல்லி முடிச்சிருப்பேன்.

Director Gokul

நான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன். அதான் இந்த படத்தோட முதல் காட்சிலேயே ஒரு முஸ்லீமை காமிச்சேன். இப்போ குலத்தொழில் கிடையாது. இப்போ அதெல்லாம் பார்க்கக்கூடாதுனுதான் முக்கிய கரு. விமர்சனங்களை தாண்டி இந்த படத்தை பலர் வந்து பார்த்திருக்காங்க. நான் பண்ணினதுலேயே இதுதான் பெஸ்ட் திரைப்படம். ” என முடித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மேடையேறிய தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் படக்குழுவினரின் வேலைகளை பாராட்டினார். இதன் பிறகு இப்படத்தின் இயக்குநருக்கு ஒரு தங்க செயினை பரிசாக அணிவித்தார்.

மேடையில் அமர்ந்திருந்த ஆர்.ஜே.பாலாஜி, ‘எனக்கு செயின் எங்க’ என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஐசரி.கே.கணேஷ், ” ஆர்.ஜே. பாலாஜி எங்க கூட செயினாக படம் பண்றாரு. வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு பாலாஜி பண்ணி கொடுத்த மூணு படமும் வெற்றி படம்தான். இந்த மாசம் ‘ சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் வந்திருக்கு. அடுத்த மாசம் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்துல உருவாகியிருக்கிற ‘ஜோஸ்வா’ படம் வெளியாகுது. இன்னும் நிறைய திரைப்படங்கள் வருது’ எனப் பேசி முடித்தார்.

RJ Balaji

நிகழ்வின் இறுதியில் வந்து பேசிய ஆர்.ஜே. பாலாஜி, ” படத்தோட இரண்டாம் பாதி பலருக்கு கனெக்ட்டாக இருந்ததுனு சொன்னாங்க. அதற்கு முக்கிய காரணம் அரவிந்த் சாமியோட கதாபாத்திரம்தான். நான் அவருக்கு மெசேஜ் பண்ணிட்டு போனை கீழ வைக்கிறதுக்குள்ள எனக்கு கால் பண்ணி இந்த படத்துல நான் நடிக்கிறேன்னு சொல்லிட்டார். முதல் வாரம் ஒரு திரைப்படம் நல்லா ஓடிய பிறகு இரண்டாம் வாரத்தில் அந்தப் படம் இன்னும் போகணும்னு சொல்லி வைக்கிறதுதான் ‘ சக்சஸ் மீட்’. போன வாரம் ரிலீஸான படங்கள்ல இந்த படம் அதிகமாக வசூல் பண்ணி அடுத்த வாரமும் நல்லா போகும்னு நம்பிக்கை கொடுத்துனாலதான் இந்த ‘சக்சஸ் மீட்’.

சின்னி ஜெயந்த் சார் என்னை’ சவுத் இந்தியன் அமீர் கான்’னு சொல்லிட்டார். அவர் நிறைய சாதனைகள் பண்ணவர். அப்படிலாம் சொல்லாதீங்க எனக்கு பயமா இருக்கு.” என்றவர். “எனக்கு இமான் அண்ணாச்சி சொன்ன விஷயத்துல உடன்பாடு இல்ல. அது ஜனநாயகம் கிடையாது. உரிமையோட படத்தைப் பத்தி எழுதலாம். யாருக்காக இந்தப் படத்தை எடுத்தோமோ, அவங்களுக்கு இந்தப் படம் கனெக்ட் ஆகியிருக்கிறது ரொம்ப சந்தோஷமானது.

RJ Balaji

இப்போ இந்தி மற்றும் பிற மொழிகள்ல ரத்தம், கத்தினு வன்முறையான படங்கள் வருது. அந்த வகையில வாழ்கைல எதாவது பண்ணிடமாட்டோமானு இருக்கிறவங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிற படமாக ‘சிங்கப்பூர் சலூன்’ அமைச்சிருக்கு.” எனப் பேசி முடித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.