கேரளம்: "தொடர் ஆட்சி என்பது பாசிச மனநிலை"- பினராயி விஜயன் அரசை விமர்சித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்!

கேரள மாநில ராணுவ நலன் மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்தவர் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர் பி.அசோக். இவர் கேரள வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் இருந்துவருகிறார். கேரள மாநில அரசின் கொள்கைகளையும், பல்வேறு துறைகளின் செயல்பாடுகளையும் மீடியாக்கள் வாயிலாக விமர்சித்ததற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.அசோக்கை சஸ்பெண்ட் செய்து கேரள மாநில தலைமைச் செயலாளர் ஏ.ஜெயதிலக் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை குறித்த தகவல் மத்திய அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளதால் பி.அசோக் கேரள வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் தொடர்ந்து நீடித்துவருகிறார். சிவில் சர்வீஸ் போர்டின் பரிந்துரை இன்றி இந்த சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் சூழலில், காபந்து அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. புதிய அரசு பதவியேற்ற பிறகு இந்த சஸ்பெண்ட் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பினராயி விஜயன்

அரசுக்கு எதிராக மீடியாக்கள் மூலம் விமர்சனங்களை முன்வைத்ததாக இடதுசாரி அமைப்புகளின் பிரதிநிதிகளான கே.ஓ.அசோகன் மற்றும் சஜீவ் திவாகரன் ஆகியோர் அளித்த மின்னஞ்சல் புகாரின் அடிப்படையில் பி.அசோக் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அகில இந்திய சிவில் சர்வீஸ் அதிகாரி என்ற முறையில் கடைபிடிக்க வேண்டிய அரசியல் நடுநிலையை அசோக் மீறிவிட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ​மேலும், அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

தொடர் ஆட்சி என்பது பாசிச மனநிலை என்பது உள்ளிட்ட விமர்சனங்களை மீடியாக்களில் பி.அசோக் வெளிப்படுத்தி உள்ளார். மின்சார வாரியம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விமர்சித்துள்ளார். ​அரசின் முன் அனுமதி பெறாமல், சேவை விதிகளை மீறி சமூக வலைதளங்களில் விவாதங்களில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அதிகாரி என்.பிரசாந்துடன் இணைந்து சமூக ஊடக விவாதங்களில் அசோக் பங்கேற்றுள்ளார்.

என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளன.

காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா

இதுகுறித்து கருத்து தெரிவித்த பி.அசோக், ​”இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை சட்டத்துக்கு புறம்பானது.. சரியான சமயத்தில் நீதிமன்றத்தை அணுகுவேன். அரசுக்கு எதிரான செயல்பாடு என்னவென்று அவர்கள் தெளிவுபடுத்தவில்லை. புகாரை முறையாக விசாரிக்காமல் பழிவாங்கும் நோக்கில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சட்டப்படி நிலைநிற்காது” என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகள் மறுபரிசீலனை செய்யப்படும். நேர்மையாகப் பணியாற்றும், ஊழலுக்குத் துணை போகாத ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு எதிராகத் தொடரும் பழிவாங்கும் நடவடிக்கைகளின் சமீபத்திய உதாரணமே பி.அசோக்கின் சஸ்பெண்ட் நடவடிக்கை. சமூக ஊடகங்களில் பேசினார் என்ற இடதுசாரி அமைப்புகளின் புகாரை வைத்து எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.