`ஊழல் என்றால் என்னவென்றே தெரியாத எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்!' – அண்ணாமலை

விழுப்புரம் மாவட்டத்தில், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் பரப்புரை மேற்கொண்ட அந்தக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, “விழுப்புரம் மாவட்டம் அதிகமான தேர்தல்களை சந்தித்துள்ளது. குறிப்பாக, குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு வாக்களித்து அவர்கள் ஆட்சியில் இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கின்றனவா என்றால் நிச்சயமாக கிடையாது. மக்களது வாழ்க்கைத் தரத்தில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை, அப்படியேதான் இருக்கிறார்கள். 8 ஆண்டுகளில் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை முழுமையாக மாற்றி இருக்கின்ற ஒரு அரசு என்றால், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுதான்.

பரப்புரை மேடையில் அண்ணாமலை

2014-க்கு முன்பு தமிழகத்தில் எத்தனையோ வீட்டுகளில் கழிப்பறை கூட இல்லை. ஆனால், பா.ஜ.க அரசு 57 லட்சம் கழிப்பறைகளை இலவசமாக இதுவரை இந்தியா முழுவதிலும் கட்டிக் கொடுத்துள்ளது. இங்கு ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் அரிசியை, ஒரு கிலோ 42 ரூபாய்க்கு வாங்கி, தமிழக அரசுக்கு 2 ரூபாய்க்கு கொடுக்கிறது மத்திய அரசு. ஆனால் இங்குள்ள அரசு, அவர்களாகவே நாற்று நட்டு, தண்ணீர் பாய்ச்சி, நெல்லாக்கி, அதிலிருந்து அரிசி எடுத்து மக்களுக்கு கொடுப்பதைப் போல மஞ்சள் பையில் ஸ்டிக்கர் ஒட்டி ஒரு பில்டப் காட்டுகிறது. ஆனால், இங்குள்ள தி.மு.க ஆட்சியில், நிறைய தாய்மார்களின் கைகளில் இருக்கும் வளையல்கள், கழுத்தில் இருக்கும் சங்கிலிகளை கூட காணவில்லை.

நகைக் கடன் வைக்கப்பட்டவை தள்ளுபடி செய்யப்படும் என சொல்லிவிட்டு, வடிவேல் இரண்டு பாக்கெட்களை காண்பித்து ‘ஒன்னும் இல்லையே’ என்று சொல்வதைப்போல… இன்று தமிழக முதலமைச்சர், சட்டமன்றத்திலே பாக்கெட்டை காண்பித்து ‘அப்படி ஒன்றும் இல்லை’ என்கிறார். மாதம் 1,000 ரூபாய் என்ன ஆனது? என்றால், `இன்னும் நான்கு வருடம் இருக்கிறதே, தருவோம்’ என்கிறார்கள். நாலு வருடம் இருக்கு… நீங்கள் இருக்கணுமில்ல… 8 மாதத்திலான இந்த தி.மு.க ஆட்சி, 80 ஆண்டுகள் ஒரு கட்சி ஆட்சி செய்தால் மக்களுக்கு எப்படி சலிப்பு வருமோ அவ்வளவு சலிப்பு தி.மு.க அரசின் மீது மக்களுக்கு இருக்கிறது. பா.ஜ.க அரசு மட்டும் தான் இவர்கள் செய்யும் தவறுகளை தைரியமாக தட்டி கேட்டு ஊழல்களை தடுத்து கொண்டிருக்கிறது உங்களுக்காக. பக்கத்தில் இருக்கும் செஞ்சியல் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் பெயர் மஸ்தான். நான் கூட அவர் பெயரை முதலில் படிக்கும்போது மானஸ்தனாக இருப்பாரோ என நினைத்தேன். அவர், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக நேர்காணல் செய்யும் ஒரு போட்டோவை பார்த்தேன். அவருக்கு முன்னால் அமர்ந்திருப்பது அவருடைய மனைவி.

வேட்பாளர்களுடன் அண்ணாமலை

கோபாலபுரம் மாடல் பட்டி தொட்டியெல்லாம் சென்று, இன்று நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கும் கொண்டு வந்துவிட்டார்கள். கோபாலபுரத்தில் மட்டும்தான் ஒரு குடும்பம் தொடர்ச்சியாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. ஆனால், இங்கிருக்கும் பா.ஜ.க வேட்பாளர்கள் ஒருவரும் அப்படி இல்லை. நல்லாட்சி தர வேண்டும் என்பதற்காக களம் காண்கின்றனர். இவர்களுக்கு நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால், எந்த விடியலுக்காக காத்திருக்கிறீர்கள். அது விடிஞ்சாச்சு, ஆட்சிக்கு மட்டும்தான் இன்னும் விடியல. விழுப்புரம் மாவட்டம் மேம்பாடு அடைந்து, அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமென்றால்… ஊழல் என்றால் என்னவென்றே தெரியாத பா.ஜ.க வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் மட்டும் தான் நடக்கும். தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளில், 25 கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள்; 8 இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் பா.ஜ.க வேட்பாளராக களம் காண்கின்றனர். நிறைய மாநகராட்சிகளில் தி.மு.க-வை விட பா.ஜ.க அதிக இடங்களில் சிறுபான்மையினர் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.

ஆனால், இவர்கள் எதுவுமே புரியாமல் மத அரசியல் செய்து கொண்டு, மக்களை… இந்து, முஸ்லிம், கிறிஸ்து என பிரித்துக்கொண்டு, சாதிவாரியாக மக்களை பிடித்துக்கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, தமிழகத்திற்கு இன்று தேவையாக இருக்கக்கூடிய கட்சி பா.ஜ.க மட்டும் தான்.

முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

கடைசி இரண்டு நாளில் வருவாங்க தாயி… 1,000, 500 கொடுக்கிறேன் என்று. என்ன கொடுத்தாலும் வாங்கி சுருக்கு பையில் போட்டுக் கொள்ளுங்கள். உங்கள் பணம் உங்களிடம் திரும்ப வருகிறது அவ்வளவுதான். ஆனால், அந்த பணத்தை எப்படி கொடுத்தார்கள் என்று யோசித்துப்பாருங்கள். 10%, 20% என கொள்ளையடித்து வந்து உங்களிடம் கொடுத்து தேர்தலில் ஜெயித்து விடலாம் என தப்பான கணக்கு போடுகிறார்கள். அது இந்த முறை நடக்காது, அதை பா.ஜ.க அனுமதிக்காது. நீங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.