விழாக்கோலம் பூண்டுள்ள காங்கிரஸ் அலுவலகம்!!

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று பதவி ஏற்க உள்ளார்.

அண்மையில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன் கார்கே தேர்வு செய்யப்பட்டார். கடந்த 17ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். அதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார்.

24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் தலைவராக தேர்வு பெற்று வரலாறு படைத்தார். மல்லிகார்ஜுன கார்கே அக்டோபர் 26ஆம் தேதி பதவி ஏற்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று அவர் கட்சியின் தலைமையகத்தில் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்த விழாவில், காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, தேர்தல் சான்றிதழை கார்கேவிடம் முறைப்படி ஒப்படைக்கிறார். பின்னர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பொறுப்புகளை கார்கேவிடம் ஒப்படைப்பார்கள்.

பல மாநிலங்களில் காங்கிரசை வெளியேற்றி பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய சவாலான நிலையில் கார்கே காங்கிரசுக்கு தலைமை ஏற்கிறார். அவர் பா.ஜ.க.வின் சவாலை எப்படி எதிர்கொள்வார் என்பதை சோதித்து பார்ப்பதுபோல அடுத்த மாதமே இமாசலப்பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும் விரைவிலேயே குஜராத் சட்டசபை தேர்தலும் அறிவிக்கப்பட இருக்கிறது. மல்லிகார்ஜுன கார்கே தனது அரசியல் சாதுர்யத்தால், பா.ஜ.க.வை எப்படி சமாளிக்க போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.