என்னது பிட்காயின் மூலம் 100 நாளில் இரு மடங்கு பணமா? உஷார் மக்களே! இப்படியும் நடக்குமா?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் பிட் காயினில் பணம் முதலீடு செய்தால் அடுத்த 100 நாட்களில்  கோடிக்கணக்கில் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் மோசடி செய்துள்ளார்கள். இந்தப் பண மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள்  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்து அதிர வைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில் அரசு  பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி செய்து வருபவர்களான ராஜசேகர், அன்பழகன், ஜெரால்ட் இம்மானுவேல், சதீஷ்குமார், அன்சார் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அரசு ஆசிரியர்கள் போலி பிட்காயின் டிசைன் செய்பவர்களான செந்தில் மற்றும் செல்வகுமாருடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகின்றது. இவர்கள் பண ஆசையை தங்களின் நண்பர்களிடம் தூண்டி பிட்காயினில் முதலீடு செய்தால் அடுத்த 100 நாட்களில் உங்கள் பணம் இரண்டு மடங்காகும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதோடு ஒரு சில போலியான வெப்சைட்டுகளை ஓபன் செய்து அதனைக் காட்டியும் ஏமாற்றியுள்ளனர். 

இவர்கள் தங்களுடன் பழகியவர்களிடம் இருந்து 10 லட்சம், 20 லட்சம் என சுமார் 10 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் பெற்றுள்ளனர். இவர்கள் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களிடம் பணம் கொடுத்தவர்கள் பல நாட்கள் காத்திருந்தும் எந்த பணமும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. அதன்பிறகு தான் இவர்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் மோசடி புகார் அளித்து தங்கள் பணத்தைப் பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்த மனுக்களை பெற்ற ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பெயரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சமீபத்தில் ஆருத்ரா மூலம் பல ஆயிரம் கோடியை பொதுமக்கள் இழந்த நிலையில், இப்போது இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை அவர்கள் இழந்துள்ளனர். இவர்களது பணம் திரும்பவும் இவர்களுக்கு கிடைக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.