"இந்த வெப்சீரிஸ் 99 சதவிகிதம் உண்மை. அதனால…" – சொந்த வாழ்க்கையைப் படமாக்கும் இயக்குநர் சோனா

அஜித் நடித்த `பூவெல்லாம் உன் வாசம்’ மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சோனா. சினிமாவில் 23வது ஆண்டைக் கொண்டாடுகிறார். சில வருடங்களுக்கு முன்னர் வெளியான `கனிமொழி’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளரும் ஆனவர், இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். தனது திரையுலக பயணம், தான் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் என தன் அனுபவங்களை வெப்சீரிஸாகக் கொண்டு வருகிறார். கதையை எழுதியதுடன் `ஸ்மோக்’ என்று பெயரிட்டு அதை இயக்கவும் இருக்கிறார். அவரது வாழ்க்கைக் கதையை பற்றி இங்கே மனம் திறக்கிறார் சோனா.

சோனா

“இப்போது இயக்கவுள்ள வெப்சிரீஸ் கதையை எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் டைரியில் எழுதத் தொடங்கினேன். கடந்த 2017-ல் டைரக்ஷன் கோர்ஸில் சேர்ந்து ஒளிப்பதிவு உள்ளிட்ட சில நுணுக்கங்களையும் கத்துக்கிட்டேன். எனது நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்களிடம் இந்தக் கதையைச் சொன்னதுமே எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள். அவர்களது ரியாக்ஷனைப் பார்த்து என்னைக் கிண்டல் செய்கிறார்களோ என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர்களோ இது ஒரு நடிகையின் கதை மட்டுமல்ல ஒவ்வொரு பெண்ணும் தங்களுடன் தொடர்புப்படுத்தி பார்க்கக்கூடிய படம் என்று பாராட்டி ஊக்கம் கொடுத்தனர். அதன் பிறகுதான் எனக்கென ஒரு டைரக்ஷன் டீமை உருவாக்கினேன். எனக்கு நன்கு அறிமுகமான சில இயக்குநர்கள், ஒளிப்பதிவார்களிடம் இதுபற்றி கலந்து விவாதித்தேன். கதை ராவாக இருக்கிறதே என்று சொன்னார்களே தவிர யாரிடமும் இருந்து எந்த எதிர்மறை கருத்துகளும் வரவில்லை.

இந்த வெப்சீரிஸை பல சீசன்களாக எடுக்கும் திட்டம் வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு விதமான நிகழ்வுகளை கதையாக உருவாக்கி இருக்கிறேன் இந்த முதல் சீசனில் எத்தனை எபிசோடுகள் எடுக்கப் போகிறேன் எனத் திட்டமிடவில்லை. ஏதோ ஒரு காலகட்டத்தில் நடிகைகளின் கதைகளை யாராவது ஒருவர் படமாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் என் கதையை அப்படி வேறு யாரும் சொல்லக்கூடாது என்பதால் நானே சொல்லி விடுகிறேன். ஆனால் இதில் 99 சதவிகிதம் உண்மையைத்தான் பேசப்போகிறேன். அதற்காக நீங்கள் என்னைக் கழுவி ஊற்றினாலும் பரவாயில்லை. இதில் நிஜமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவற்றின் பெயர்களை எல்லாமே மாற்றியிருக்கிறேன். இன்னும் ஒரு ஹைலைட் என்னவென்றால் இந்த படத்தில் சனா என்கிற என்னுடைய கதாபாத்திரத்தின் பல்வேறு காலகட்ட தோற்றங்களில் நடிப்பதற்காக ஒவ்வொரு வயதிலும் என்னைப் போன்ற தோற்றம் போன்ற ஐந்து சனாக்களைத் தேடிப்பிடித்து நடிக்க வைத்திருக்கிறேன்.

மாரி சீரியலில் சோனா

இந்த கதை ஒரு உணர்ச்சிகரமான பயணமாக இருக்கும். இதை திரைப்படமாக எடுக்கலாமே எனப் பலர் கேட்கின்றனர். இது நல்ல கதையாக இருந்தாலும் ராவாக இருப்பதால் சில பேருக்குப் பிடிக்காது. ஆனால் ஓ.டி.டி-யில் இதை சுதந்திரமாக உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது. என்னுடைய படத்திற்கு நானே சான்றிதழ் கொடுப்பது என்றால் யு/ஏ சான்றிதழ் தரும் அளவிற்கு இந்தத் தொடர் இருக்கும்.

இந்த வெப்சீரிஸ் வெளியாகும்போது ‘தி பிகினிங் ஆப் எண்ட்’ (The Begining Of End) என ஒரு டேக்லைனை சேர்க்க இருக்கிறேன். அதாவது ஒரு கவர்ச்சி நடிகையின் முடிவு என்பதுதான் அதற்கு அர்த்தம். சென்னை மற்றும் கேரளாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ஷார்ட்ஃபிலிக்ஸ் துணையுடன் இதை நானே தயாரிக்கிறேன். மலையாளத்திலும் எனக்கு வரவேற்பு இருப்பதால் அங்கே மொழிமாற்றம் செய்து வெளியிடும் எண்ணமும் இருக்கிறது. படத்தை இயக்கிக்கொண்டே நடிப்பது கடினம் போலத்தான் தெரியும். கூடுதலாக எனக்குத் தயாரிப்பு சுமையும் சேர்ந்து இருக்கிறது. ஆனாலும் நீங்கள் நினைப்பது போல இது எனக்குக் கடினமாக இல்லை.

சோனா

இது ஓர் இயக்குநராகக் கிடைத்த வாய்ப்பு என்று சொல்வதைவிட என்னுடைய கனவை, கதையைச் சொல்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் என்றே சொல்வேன். இத்தனை வருடங்களில் நான்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அத்தனை பட இயக்குநர்களுக்கும் இந்த வெப்சீரிஸை அர்ப்பணிக்க விரும்புகிறேன்” என்கிறார் சோனா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.